தண்ணீரில் மிதக்கும் என்று கருதி தனுஷ்கோடியில் கட்டிடங்களில் பெயர்த்து எடுக்கப்படும் கற்கள்


தண்ணீரில் மிதக்கும் என்று கருதி தனுஷ்கோடியில் கட்டிடங்களில் பெயர்த்து எடுக்கப்படும் கற்கள்
x
தினத்தந்தி 19 Feb 2019 4:45 AM IST (Updated: 19 Feb 2019 3:51 AM IST)
t-max-icont-min-icon

தண்ணீரில் மிதக்கும் என்று கருதி தனுஷ்கோடியில் கட்டிடங்களில் கற்கள் பெயர்த்து எடுக்கப்பட்டு வருகின்றன.

ராமேசுவரம்,

ராமேசுவரம் அருகே உள்ளது புயலால்அழிந்து போன தனுஷ்கோடி. தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியாவின் பல மாநிலங்களில் இருந்தும் கோவிலுக்கு வரும் பக்தர்களும் ஏராளமான சுற்றுலா பயணிகளும் தனுஷ்கோடி பகுதிக்கு சென்று சேதமான கட்டிடங்களையும் மற்றும் புதிதாக அமைக்கப்பட்டுள்ள சாலை கடல் மற்றும் கடற்கரையை பார்த்து ரசித்து செல்கின்றனர்.

1964–ம் ஆண்டுக்கு முன்பு வரை தனுஷ்கோடி மிகப்பெரிய ஒரு தொழில் நகரமாக விளங்கியது. கடும் புயல் மற்றும் கடல் கொந்தளிப்பால் தனுஷ்கோடி நகரமே முற்றிலும் அழிந்துபோனது. புயலால் அழிந்துபோன தனுஷ்கோடி பகுதியில் உள்ள கட்டிடங்கள் அனைத்தும் இடிந்த நிலையில் காட்சி அளித்து வருகின்றன. தனுஷ்கோடியில் இருந்த பெரும்பாலான கட்டிடங்கள் பவளப்பாறை மற்றும் சுண்ணாம்பு கற்களால் கட்டப்பட்டவை. புயலில் அனைத்து கட்டிடங்களும் சேதம் ஆனாலும் ரெயில்வே நிலைய கட்டிடம் மற்றும் கிறிஸ்தவ ஆலயம் ஓரளவு கட்டிடங்களாக காட்சி அளித்து வருகின்றன.

தனுஷ்கோடியில் உள்ள புயலால் சேதமான கிறிஸ்தவ ஆலயம் சுண்ணாம்பு கற்களால் கட்டப்பட்டவை. இவற்றை தண்ணீரில் மிதக்கக்கூடிய கற்கள் என நினைத்து சுற்றுலா பயணிகள் பலர் கிறிஸ்தவ ஆலயத்தில் உள்ள கற்களை உடைத்து பெயர்த்து வீடுகளுக்கு எடுத்துச் சென்று வருகின்றனர். ஒரு சிலர் சுற்றுலா பயணிகளிடம் விலைக்கு விற்பனை செய்து வருவதாக கூறப்படுகிறது. முன்பே புயலால் சேதமான கட்டிடங்களை சீரமைக்கும் திட்டம் கிடப்பில் போடப்பட்டது.

இதனால் தற்போது கிறிஸ்தவ ஆலயத்தில் உள்ள கற்கள் பெயர்த்து எடுக்கப்பட்டு வருவதால் அந்த ஆலயம் இடிந்து விழும் நிலையில் காட்சி அளித்து வருகிறது. எனவே தனுஷ்கோடி பகுதியில் உள்ள அனைத்து கட்டிடங்களையும் பழமை மாறாமல் புனரமைக்கவும் அதுவரையிலும் சுற்றுலாபயணிகள் கற்களை பெயர்த்து உடைத்து எடுத்துச் செல்லாமல் இருக்கும் வகையில் அங்கு எச்சரிக்கை அறிவிப்பு பலகைகளை வைப்பதற்கும் அதிகாரிகள் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story