ஈரோடு காவிரிக்கரையில் திதி, தர்ப்பணம் கொடுக்க இட ஒதுக்கீடு பொதுமக்கள் கோரிக்கையை ஏற்று அதிகாரிகள் ஆய்வு
ஈரோடு காவிரிக்கரையில் திதி, தர்ப்பணம் கொடுக்க இட ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்கிற பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
ஈரோடு,
ஈரோடு கருங்கல்பாளையம் காவிரி ஆற்றில் திதி கொடுக்கவும், தர்ப்பணம் செய்யவும் ஏராளமானவர்கள் வருவது வழக்கம். குறிப்பாக மகாளய அமாவாசை, ஆடி வெள்ளி போன்ற தினங்களில் பக்தர்களின் கூட்டம் அதிகமாக இருக்கும். அவர்கள் காவிரிக்கரையில் அமர்ந்து திதி, தர்ப்பணம் கொடுத்து வருகின்றனர்.
எனவே திதி, தர்ப்பணம் கொடுக்க தனி இடம் ஒதுக்கி தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகிறார்கள். அதைத்தொடர்ந்து மாநகராட்சி அதிகாரிகள் நேற்று காவிரிக்கரை பகுதியில் ஆய்வு நடத்தினர். அப்போது காவிரிக்கரையில் தற்போது பக்தர்கள் அமர்ந்து திதி கொடுக்கும் இடத்தையும், ஒதுக்கப்பட வேண்டிய தனி இடத்தையும் அதிகாரிகள் பார்வையிட்டனர். அவர்களிடம் முன்னாள் கவுன்சிலர் காவிரிசெல்வம் இடத்தை காண்பித்தார்.
இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறியதாவது:–
காவிரிக்கரை வழியாக முனியப்பன் நகருக்கு செல்ல வேண்டும். காவிரிக்கரையில் திதி, தர்ப்பணம் கொடுப்பதால் வழிப்பாதையில் பொதுமக்கள் நடந்து செல்ல முடிவதில்லை. குறிப்பாக பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவ–மாணவிகளுக்கு சிரமம் ஏற்படுகிறது. எனவே காவிரிக்கரையில் பக்தர்கள் திதி, தர்ப்பணம் கொடுப்பதற்காக தனி இடம் ஒதுக்கி தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்தோம். எங்களது கோரிக்கையை ஏற்று கே.எஸ்.தென்னரசு எம்.எல்.ஏ. ஈரோடு மாநகராட்சி ஆணையாளரிடம் பரிந்துரை கடிதத்தை கொடுத்தார்.
அதன்பேரில் மாநகராட்சி அதிகாரிகள் காவிரிக்கரைக்கு வந்து பார்வையிட்டு சென்றனர். எனவே காவிரிக்கரையில் திதி, தர்ப்பணம் கொடுக்க தனி இடம் ஒதுக்கி கொடுக்க வேண்டும். மேலும், காவிரி ஆற்றில் பொதுமக்கள் குளிப்பதற்கு வசதியாக படித்துறையையும் கட்டிக்கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.