வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு அரசு பள்ளி மாணவர்கள் அஞ்சலி ராணுவ அதிகாரி கலந்து கொண்டார்


வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு அரசு பள்ளி மாணவர்கள் அஞ்சலி ராணுவ அதிகாரி கலந்து கொண்டார்
x
தினத்தந்தி 19 Feb 2019 3:54 AM IST (Updated: 19 Feb 2019 3:54 AM IST)
t-max-icont-min-icon

காஷ்மீரில் வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு அரசு பள்ளி மாணவர்கள் அஞ்சலி செலுத்தினர். இதில் விடுமுறையில் ஊருக்கு வந்த ராணுவ அதிகாரி கலந்து கொண்டு வீரவணக்கம் செலுத்தி உரை நிகழ்த்தினார்.

சிவகங்கை,

காஷ்மீரில் பயங்கரவாதிகள் துணை ராணுவ வீரர்கள் சென்ற வாகனங்கள் மீது வெடிகுண்டு நிரம்பிய காரை மோத வைத்ததில் தமிழ்நாட்டை சேர்ந்த 2 பேர் உள்பட 40 வீரர்கள் இறந்து போனார்கள். இந்த சம்பவத்தில் உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு நாடெங்கும் மக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

அதன்படி சிவகங்கையை அடுத்த கீழக்கண்டனியில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் வீரமரணம் அடைந்த துணை ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. தலைமை ஆசிரியர் செல்வராஜ் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் காஷ்மீரில் உள்ள அவந்திபோரா காஜிகுண்டில் உள்ள ராணுவ சி167 பட்டாலியனின் அதிகாரி நம்பிராஜன் கலந்து கொண்டார்.

இவர் தற்போது விடுமுறையில் தனது சொந்த ஊரான சிவகங்கைக்கு வந்திருந்தார். காஷ்மீர் சம்பவம் நடந்த போது அவர் தனது ஊரில் இருந்தார். அதைத்தொடர்ந்து சிவகங்கையில் நடைபெறும் அஞ்சலி செலுத்தும் இடங்களுக்கு சென்று வீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்தி உரையாற்றி வருகிறார்.

அதன்படி அரசு பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் பட்டாலியன் அதிகாரி கலந்து கொண்டு நமது ராணுவம் மற்றும் வீரர்களின் சேவை குறித்து மாணவர்களிடம் பேசினார். இதில் மாணவர்கள் உள்பட பொதுமக்கள் கலந்து கொண்டு அதிகாரியின் பேச்சை உருக்கமாக கேட்டு மெய்சிலிர்த்தனர். நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள், அலுவலகப் பணியாளர்கள், பெற்றோர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.


Next Story