மடப்புரம் பகுதியில் மணல் திருட்டு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்


மடப்புரம் பகுதியில் மணல் திருட்டு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்
x
தினத்தந்தி 18 Feb 2019 10:30 PM GMT (Updated: 18 Feb 2019 10:26 PM GMT)

திருப்புவனம் அருகே உள்ள மடப்புரம் பகுதியில் தொடந்து மணல் திருட்டு சம்பவம் நடைபெற்று வருவதால் இந்த பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது.

திருப்புவனம்,

திருப்புவனம் அருகே உள்ளது மடப்புரம். இங்கு பிரசித்தி பெற்ற அடைக்கலம் காத்த அய்யனார் மற்றும் பத்திரகாளியம்மன் கோவில் உள்ளது. இங்குள்ள பஸ் நிலையம் அருகே உள்ளது அல்லி ஊருணி. மடப்புரம் கண்மாய்க்கு மழைக்காலங்களில் தண்ணீர் அதிக அளவு வந்தவுடன் அங்குள்ள கால்வாய் வழியாக இந்த ஊருணிக்கு தண்ணீர் வந்து நிரம்புவது வழக்கம். தற்சமயம் தண்ணீர் வரும் கால்வாய் மராமத்து பணி செய்யாமல் செடிகள் மண்டி காணப்படுகிறது.

இதனால் ஊருணி வற்றிய நிலையில் காணப்பட்டு வருகிறது. இதை பயன்படுத்தி சில மர்ம நபர்கள் ஊருணியில் மணல் திருட்டில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் சிறு, சிறு மூடைகளில் தலைச்சுமையாக மணல் கடத்தி செல்வது அதிக அளவு நடக்கிறது. மேலும் இரு சக்கர வாகனத்திலும் சிறு, சிறு மூடைகளில் மணல் கடத்தி செல்கின்றனர்.

மணல் திருட்டு சம்பவம் பெரும்பாலும் இரவு முதல் அதிகாலை வரையிலும், சில பகுதியில் அதிகாலையில் இருந்து காலை 10 மணி வரையிலும் தொடர்ந்து நடந்து வருகிறது. தொடர் மணல் திருட்டால் அல்லி ஊருணியில் பெரிய பள்ளங்கள் காணப்பட்டு வருகின்றன. மடப்புரம் பஸ் நிலையத்திலிருந்து திருப்புவனம் புதூருக்கு செல்ல வைகையாற்றுக்குள் ஒற்றையடி பாதை இருந்தது.

மணல் திருட்டு சம்பவத்தால் இந்த பாதை லாரிகள் செல்லும் அளவிற்கு மணல் அள்ளப்பட்டு பெரிய பாதையாக மாறியதுடன், கட்டாந்தரை போல காணப்படுகிறது. இவ்வாறு தொடர் மணல் திருட்டால் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே இந்த பகுதியில் மணல் திருட்டு சம்பவத்தில் ஈடுபடும் நபர்கள் மீது அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story