அரசு ஊழியர்களின் பிள்ளைகள் அரசு பள்ளிகளில்தான் படிக்க வேண்டும் என விதிமுறை கொண்டு வரலாமே? மதுரை ஐகோர்ட்டு கேள்வி


அரசு ஊழியர்களின் பிள்ளைகள் அரசு பள்ளிகளில்தான் படிக்க வேண்டும் என விதிமுறை கொண்டு வரலாமே? மதுரை ஐகோர்ட்டு கேள்வி
x
தினத்தந்தி 18 Feb 2019 10:46 PM GMT (Updated: 18 Feb 2019 10:46 PM GMT)

‘‘அரசு ஊழியர்களின் பிள்ளைகள், அரசு பள்ளிகளில்தான் படிக்க வேண்டும், இதுதொடர்பான விதிமுறை கொண்டு வரலாமே?’’ என மதுரை ஐகோர்ட்டு அதிரடி கேள்வி எழுப்பியது.

மதுரை,

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சங்கத்தினர் (ஜாக்டோ–ஜியோ) வேலை நிறுத்த போராட்டம் நடத்தினார்கள்.

இந்த நிலையில் அவர்கள் வேலைநிறுத்தம் அறிவித்த போது, அதற்கு தடை கேட்டு லோகநாதன் என்பவர் ஏற்கனவே தொடர்ந்திருந்த வழக்கு நிலுவையில் இருந்து வந்தது.

அந்த வழக்கு நீதிபதிகள் என்.கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, ‘‘கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட ஜாக்டோ–ஜியோ அமைப்புகளை சேர்ந்தவர்கள் பணி இடமாற்றம் செய்யப்பட்டனர். அவர்களை மீண்டும் பழைய பணியிடத்தில் அமர்த்த அரசுக்கு உத்தரவிட வேண்டும்’’ என்று ஜாக்டோ–ஜியோ தரப்பினர் சார்பில் நீதிபதிகள் முன்பு முறையிடப்பட்டது. ஆனால் இந்த கோரிக்கை குறித்து தனியாக மனு தாக்கல் செய்தால் விசாரிக்கப்படும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

பின்னர் ‘‘சம்பளம் எவ்வளவு முக்கியமோ, அதேபோல் கடமையையும் அரசு ஊழியர்கள் முக்கியமாக கருத வேண்டும். சம்பள வி‌ஷயத்தில் பொதுமக்களின் அடிப்படை வருமானத்துக்கும், அரசு ஊழியர்களின் வருமானத்துக்கும் உள்ள வித்தியாசம் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்துக்கொண்டே செல்கிறது’’ என நீதிபதிகள் தெரிவித்தனர்.

இருந்தபோதும், வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்ட வேலை நாட்களை அரசு ஊழியர்களின் விடுப்பு நாளாக கணக்கில் கொள்ளலாமா? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

மேலும், ‘‘அரசு ஊழியர்களின் பிள்ளைகளை அரசு பள்ளிகளில் தான் படிக்க வேண்டும் என விதிமுறையை கொண்டு வரலாமே? அரசு பள்ளியில் படிப்பவர்களுக்கு அரசு மருத்துவ கல்லூரி மற்றும் என்ஜினீயரிங் கல்லூரிகளில் 50 சதவீத இடஒதுக்கீடு வழங்கலாம்’’ எனவும் நீதிபதிகள் அதிரடி கேள்வி எழுப்பினர்.

பின்னர் இந்த வழக்கு விசாரணையை வருகிற 21–ந் தேதிக்கு ஒத்திவைத்தனர்.


Next Story