வறுமைக்கோடு பட்டியலில் தகுதியான ஏழைகளை சேர்க்க வேண்டும் கலெக்டரிடம் கிராம மக்கள் மனு
தமிழக அரசின் சிறப்பு நிதிஉதவி ரூ.2 ஆயிரம் பெறுவதற்கான வறுமைக்கோடு பட்டியலில் தகுதியான ஏழைகளை சேர்க்க வேண்டும் என்று கலெக்டரிடம் கிராம மக்கள் மனு கொடுத்தனர்.
மதுரை,
தமிழகத்தில் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள ஏழை மக்களுக்கு ரூ.2 ஆயிரம் நிதிஉதவி வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி நிதிஉதவி வழங்குவதற்காக வறுமைக்கோடு பட்டியலில் உள்ள பெயர்களை சரிபார்க்கும் பணியில் அலுவலர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் இந்த பட்டியலில் ஏராளமான பெயர்கள் விடுப்பட்டு இருப்பதாகவும், அதில் தங்களது பெயர்களை சேர்க்க வேண்டும் என்பதனை வலியுறுத்தியும் ஏராளமானோர் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர்க்கும் கூட்டத்தில் மனு கொடுக்க குவிந்தனர்.
வாடிபட்டி காந்தி கிராமம், காஞ்சரம்பேட்டை சில்லுப்பட்டி, உசிலம்பட்டி புல்லுக்குட்டிநாயக்கன்பட்டி, டி.கிருஷ்ணாபுரம் ஒத்தக்கடை ஆகிய கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் கலெக்டரிடம் கொடுத்த மனுவில், ஏற்கனவே வறுமைக்கோடு பட்டியலில் பெயர் இருந்தவர்கள் விடுப்பட்டுள்ளனர். அவர்களை பட்டியலில் சேர்க்க வேண்டும். இதுதவிர தகுதியான ஏழைகளையும் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டு இருந்தது.
பாப்பாபட்டி ஒச்சாண்டாம்மன் கோவில் திருவிளக்கு பூஜைக்குழு சார்பில் கலெக்டரிடம் கொடுத்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:–
எங்கள் கோவில் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இங்கு 2014–ம் ஆண்டு வரை மாசி பச்சை திருவிழா சிறப்பாக நடந்து வந்தது. 2015–ம் ஆண்டு கிடாய் வெட்டு திருவிழாவின் போது, முதன்மை மரியாதை தொடர்பாக பிரச்சினை ஏற்பட்டது. இது தொடர்பாக வழக்கு நிலுவையில் உள்ளது. ஆனால் திருவிழா நடத்த எந்த தடை உத்தரவும் இல்லை. கடந்த 4 ஆண்டுகளாக மாசி பச்சை திருவிழா முறையாக வழக்கப்படி நடைபெறவில்லை. அடுத்த மாதம் (மார்ச்) 4–ந் தேதி மாசி பச்சை திருவிழா நடைபெற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.