மார்த்தாண்டம் மேம்பாலத்தில் டெம்போ– லாரி மோதல்; டிரைவர் படுகாயம்


மார்த்தாண்டம் மேம்பாலத்தில் டெம்போ– லாரி மோதல்; டிரைவர் படுகாயம்
x
தினத்தந்தி 19 Feb 2019 10:45 PM GMT (Updated: 19 Feb 2019 2:58 PM GMT)

மார்த்தாண்டம் மேம்பாலத்தில் டெம்போ–லாரி மோதிய விபத்தில் டிரைவர் படுகாயம் அடைந்தார். அடிக்கடி வாகனங்கள் விபத்தில் சிக்குவதால் சம்பவத்தப்பட்ட ஆய்வு செய்து விபத்தை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

குழித்துறை,

மார்த்தாண்டம் பகுதியில் அடிக்கடி ஏற்படும் போக்குவரத்து நெருக்கடிக்கு தீர்வு காணம் வகையில் பிரம்மாண்ட மேம்பாலம் கட்டப்பட்டது. இந்த மேம்பாலம் கட்டப்பட்டதை தொடர்ந்து மார்த்தாண்டம் பகுதியில் போக்குவரத்து நெருக்கடி குறைந்தது. தற்போது பாலத்தின் கீழ் பகுதியில் சாலை அமைக்கப்பட்டு போக்குவரத்து நடைபெற்று வருகிறது.

இதனால் களியக்காவிளையில் இருந்து நாகர்கோவில் செல்லும் வாகனங்கள் வெட்டுவெந்நி பகுதியில் இருந்தே பாலத்தில் சென்றுவிடுகிறது.


இந்தநிலையில் நேற்று அதிகாலை இந்த பாலத்தின் வழியாக தர்பூசணிகளை ஏற்றிக்கொண்டு ஒரு லாரி சென்று கொண்டிருந்தது. அப்போது, பின்னால், தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்தவர் ஜெயமுருகன் (வயது32) என்பவர் டெம்போவில் தண்ணீர் கேன்களை ஏற்றிக்கொண்டு களியக்காவிளை நோக்கி சென்று கொண்டிருந்தார்.

டெம்போ பாலத்தில் வெட்டுமணி பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது, திடீரென கட்டுப்பாட்டை இழந்து முன்னால் சென்ற லாரி மீது மோதியது. இந்த விபத்தில் ஜெயமுருகன் பலத்த காயம் அடைந்தார். அந்த வழியாக சென்று வாகன ஓட்டிகள் உடனே இதுபற்றி மார்த்தாண்டம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் டெம்போவில் சிக்கி இருந்த ஜெயமுருகனை மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.


இதுகுறித்து மார்த்தாண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். புதிய மேம்பாலத்தில் வெட்டுவெந்நி பகுதியில் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விபத்துக்கான காரணங்கள் குறித்து ஆய்வு செய்து அதை தவிர்ப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story