நிவாரணம் வழங்க வலியுறுத்தி தாசில்தார் ஜீப்பை, கிராம மக்கள் முற்றுகை


நிவாரணம் வழங்க வலியுறுத்தி தாசில்தார் ஜீப்பை, கிராம மக்கள் முற்றுகை
x
தினத்தந்தி 20 Feb 2019 4:30 AM IST (Updated: 20 Feb 2019 12:39 AM IST)
t-max-icont-min-icon

வேளாங்கண்ணி அருகே நிவாரணம் வழங்க வலியுறுத்தி தாசில்தார் ஜீப்பை, கிராம மக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

வேளாங்கண்ணி,

வேளாங்கண்ணி அருகே உள்ள கீழையூர் ஒன்றியம் கருங்கன்னி ஊராட்சியில் உள்ள மக்கள் கஜா புயலால் பாதிக்கப்பட்டனர். இவர்களுக்கு இதுவரை முறையான நிவாரணம் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. ஆதலால் புயலால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிவாரணம் வழங்க வலியுறுத்தி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ரவி தலைமையில் நேற்று கிராம மக்கள், கிராம நிர்வாக அலுவலகத்தை முற்றுகையிடுவதற்காக சென்றனர்.

இந்தநிலையில் கீழ்வேளூர் சமூக பாதுகாப்பு தாசில்தார் (தனி) அமிர்த விஜயரங்கன், அந்த வழியாக ஜீப்பில் வந்தார். அப்போது கிராம மக்கள், அவரது ஜீப்பை முற்றுகையிட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த கீழையூர் போலீசார், கிராம மக்களை அழைத்து அருகில் உள்ள திருமண மண்டபத்தில் வைத்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது புயலால் பாதிக்கப்பட்ட அனைத்து வீடுகள், தென்னை மரங்கள், கால்நடைகள் ஆகியவற்றிற்கு பாகுபாடின்றி நிவாரணம் வழங்க வேண்டும். அதேபோல புயலால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களுக்கு உடனடியாக நிவாரணத்தொகை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை வைத்தனர்.

இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் பேசி ஒரு வார காலத்திற்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர்கள் கூறினர். பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் கிராம மக்கள், அங்கிருந்து கலைந்து சென்றனர். தாசில்தார் ஜீப்பை கிராம மக்கள் முற்றுகையிட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story