மின்மாற்றியை சீரமைக்கக்கோரி காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல் போக்குவரத்து பாதிப்பு


மின்மாற்றியை சீரமைக்கக்கோரி காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல் போக்குவரத்து பாதிப்பு
x
தினத்தந்தி 20 Feb 2019 4:30 AM IST (Updated: 20 Feb 2019 1:21 AM IST)
t-max-icont-min-icon

மின்மாற்றியை சீரமைக்கக்கோரி காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

விக்கிரமங்கலம்,

அரியலூர் மாவட்டம், விக்கிரமங்கலம் அருகே கீழநத்தம் ஊராட்சிக்கு உட்பட்டது மழவராயநல்லூர் கிராமம். இக்கிராமத்தில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த 16-ந் தேதி மழவராயநல்லூர் மேற்குதெருவில் உள்ள மின்மாற்றி பழுதடைந்துள்ளது. இதனால் குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்கு கடந்த சில நாட்களாக மின்சாரம் இல்லாததால் அப்பகுதி மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கூறியும், எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள் காலிக்குடங்களுடன் கடம்பூர்- விக்கிரமங்கலம் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த விக்கிரமங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் கோவிந்தசாமி, மணவாளன் மற்றும் போலீசார், ஊராட்சி செயலாளர் முருகானந்தம் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது சம்பந்தப்பட்ட மின்சாரவாரிய அதிகாரிகளிடம் கூறி மின்மாற்றியை உடனே சீரமைத்து மின்சாரம் வினியோகம் செய்யப்படும் என்று உறுதி அளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் கடம்பூர்- விக்கிரமங்கலம் சாலையில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

Next Story