திருச்சி விமான நிலையத்தில் ரூ.35 லட்சம் கடத்தல் தங்க நகைகள் பறிமுதல்


திருச்சி விமான நிலையத்தில் ரூ.35 லட்சம் கடத்தல் தங்க நகைகள் பறிமுதல்
x
தினத்தந்தி 19 Feb 2019 11:00 PM GMT (Updated: 19 Feb 2019 8:09 PM GMT)

திருச்சி விமான நிலையத்தில் ரூ.35 லட்சம் மதிப்பிலான கடத்தல் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக பெண் பயணிகள் உள்பட 4 பேரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

திருச்சி,

மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து திருச்சி விமான நிலையத்திற்கு ஏர் ஏசியா விமானம் நேற்று முன்தினம் இரவு வந்தது. இந்த விமானத்தில் வரும் பயணிகள் சிலர், தங்களது உடைமைகளுக்குள் மறைத்து தங்கம் கடத்தி வருவதாக மத்திய வான்நுண்ணறிவு பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதைத்தொடர்ந்து விமானத்தில் இருந்து இறங்கி வந்த பயணிகளின் உடைமைகளை மத்திய வான்நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் தீவிர சோதனை செய்தனர். அப்போது சிவகங்கையை சேர்ந்த குத்புதீன் தலைமையில் வந்த பெண் பயணிகள் தீபா, மகாலட்சுமி, தமிழ்க்கொடி ஆகியோரின் உடைமைகளை அதிகாரிகள் சோதனை செய்தபோது அவர்கள் 1 கிலோ 104 கிராம் எடையுள்ள தங்கநகைகளை கடத்தி கொண்டு வந்தது கண்டறியப்பட்டது.

தீபாவிடம் இருந்து 376 கிராம், மகாலட்சுமியிடம் இருந்து 320 கிராம், தமிழ்க்கொடியிடம் இருந்து 408 கிராம் எடையுள்ள தங்கநகைகள் என மொத்தம் 1 கிலோ 104 கிராம் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது. அவற்றின் மதிப்பு ரூ.35 லட்சத்து 20 ஆயிரம் ஆகும். தங்க நகைகளை கடத்தியதாக பிடிபட்ட குத்புதீன் மற்றும் தீபா, மகாலட்சுமி, தமிழ்க்கொடி ஆகிய 4 பேரிடமும் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

கடத்தல் கும்பலை சேர்ந்தவர்கள், விமானத்தில் வரும் பயணிகளிடம் தங்க நகைகளை கொடுத்து அனுப்பிவிட்டு, பத்திரமாக கொண்டு சேர்க்கும் பயணிகளுக்கு ஒரு பெருந்தொகையை கமிஷனாக கொடுப்பதாகவும், எனவே, சில பயணிகள் ‘குருவி’கள் போல செயல்பட்டு கடத்தலில் ஈடுபடலாம் என்ற சந்தேகம் அதிகாரிகளுக்கு ஏற்பட்டுள்ளது. எனவே, உண்மையான கடத்தல் பேர் வழி யார்? என அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Next Story