காதலியுடன் தகராறு, விடுதியில் தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை
ஊட்டியில் உள்ள ஒரு விடுதியில் காதலியுடன் ஏற்பட்ட தகராறில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
ஊட்டி,
மதுரை மாவட்டம் திருமங்கலம் பகுதியை சேர்ந்தவர் இளையசூரியன்(வயது 26). சுங்கச்சாவடியில் கணினி ஆபரேட்டராக பணிபுரிந்து வந்தார். இவரும், மீனாட்சிபுரத்தை சேர்ந்த மேனகா(23) என்பவரும் காதலித்து வந்தனர். கடந்த 16-ந் தேதி காதல் ஜோடியான இளையசூரியன் மற்றும் மேனகா ஆகியோர் சுற்றுலாவுக்காக மதுரையில் இருந்து ஊட்டிக்கு பஸ்சில் வந்தனர். பின்னர் ஊட்டி மத்திய பஸ் நிலையம் அருகே உள்ள ஒரு தனியார் தங்கும் விடுதியில் வாடகைக்கு அறை எடுத்து தங்கினர்.
நேற்று முன்தினம் இரவு விடுதிக்கு அருகிலுள்ள ஒரு ஓட்டலில் இளையசூரியன், மேனகா ஆகியோர் சாப்பிட்டனர். பின்னர் அறைக்கு திரும்பினர். அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. இதில் கோபமடைந்த மேனகா மதுரைக்கு திரும்பி செல்வதாக கூறி, அறையை விட்டு வெளியே வந்தார். உடனே அறைக்குள் இருந்தவாறு இளையசூரியன் கதவை பூட்டி கொண்டார்.
இதனால் அதிர்ச்சி அடந்த மேனகா கதவை நீண்ட நேரம் தட்டினார். ஆனால் அவர் கதவை திறக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த மேனகா, நடந்த சம்பவத்தை விடுதி மேலாளரிடம் கூறினார். உடனே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் அங்கு வந்த போலீசார் அறையின் கதவை உடைத்து உள்ளே சென்றனர். அப்போது இளையசூரியன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. உடனே பிணத்தை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக ஊட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து ஊட்டி நகர மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story