செக்ஷன்-16ஏ சட்ட மசோதாவுக்கு எதிர்ப்பு கூடலூரில் முழு அடைப்பு
செக்ஷன்-16ஏ சட்ட மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கூடலூரில் நேற்று முழு அடைப்பு நடைபெற்றது.
கூடலூர்,
கூடலூர் தொகுதியில் வருவாய்த்துறை அல்லது வனத்துறைக்கு என முடிவு செய்யப்படாத செக்ஷன்-17 நிலம் உள்ளது. இதில் 17 ஆயிரம் ஏக்கர் நிலத்தை காப்புக்காடுகள் என வரையறுக்கப்படும் செக்ஷன்-16ஏ என்ற புதிய சட்ட மசோதாவுக்குள் கொண்டு வந்து, சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த புதிய சட்ட மசோதா கவர்னர் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதற்கு கூடலூரில் உள்ள அரசியல் கட்சியினர், தொழிற்சங்கங்கள், பொதுநல அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
மேலும் கூடலூர் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்று கூறி புதிய சட்ட மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், அதனை அரசு திரும்ப பெற கோரியும் கூடலூர் சட்டமன்ற தொகுதி முழுவதும் 24 மணி நேர முழு அடைப்பு போராட்டம் நடத்த தி.மு.க. கூட்டணி அரசியல் கட்சியினர் அழைப்பு விடுத்தனர்.
இதைத்தொடர்ந்து முழு அடைப்புக்கு ஆதரவு அளிப்பதாக கூடலூர் தொகுதி வியாபாரிகள் சங்கம், அனைத்து வாகன ஓட்டுனர்கள் சங்கம் உள்பட பல்வேறு அமைப்புகளும் அறிவித்தன. அதன்படி கூடலூர் தொகுதியில் நேற்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது. இதையொட்டி காலை 6 மணிக்கு தொடங்கிய போராட்டம் இன்று(புதன்கிழமை) காலை 6 மணி வரை என 24 மணி நேரம் நடை பெற்றது. மேலும் சுற்றுலா வாகனங்கள் மற்றும் ஆட்டோ, ஜீப்புகள் எதுவும் இயக்கப்படவில்லை. இதனால் கூடலூர் நகரம் வெறிச்சோடி காணப்பட்டது. ஆனால் வழக்கம்போல் அரசு பஸ்கள் மற்றும் வெளிமாநில பஸ்களும் இயக்கப்பட்டன. இருப்பினும் தனியார் வாகனங்கள் இயக்கப்படாததால், பள்ளிக்கூடங்களில் மாணவ- மாணவிகள் வருகையும் கணிசமாக குறைந்தது.
இந்த நிலையில் கூடலூர் வழியாக ஊட்டிக்கு சென்ற சில சுற்றுலா வாகனங்களை சிலர் மறித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் போலீசார் அவர்களை எச்சரித்தனர். அதன்பின்னர் அந்த சுற்றுலா வாகனங்கள் ஊட்டிக்கு புறப்பட்டு சென்றன.
கூடலூர் துப்புக்குட்டிபேட்டை பகுதியில் சிலர் வெளிமாநில வாகனங்களை மறித்து சாலையில் பழைய டயர்களை போட்டு தீ வைக்க முயன்றனர். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, அவர்களை விரட்டினர். பின்னர் வெளிமாநில வாகனங்கள் அங்கிருந்து புறப்பட்டு சென்றன. இதைத்தொடர்ந்து கூடலூர் நகராட்சி அலுவலகம் முன்பு அனைத்து கட்சி சார்பில் கண்டன பேரணி நடந்தது. அங்கிருந்து புறப்பட்ட பேரணி கூடலூரின் முக்கிய சாலைகள் வழியாக சென்று புதிய பஸ் நிலையத்தை அடைந்தது.
பேரணியில் தி.மு.க. நிர்வாகிகள் லியாகத் அலி, பாண்டியராஜ், காங்கிரஸ் நிர்வாகிகள் கோஷிபேபி, அம்சா, கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த வாசு, பாலகிருஷ்ணன், விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி சகாதேவன் உள்பட முக்கிய நிர்வாகிகள் மற்றும் ஓவேலி பகுதி மக்கள் கலந்து கொண்டனர். பேரணியில் புதிய சட்ட மசோதாவை திரும்ப பெற வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது. இதேபோன்று பந்தலூர், மசினகுடி, சேரம்பாடி, எருமாடு, கொளப்பள்ளி உள்ளிட்ட பகுதிகளிலும் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்தது.
Related Tags :
Next Story