அம்பத்தூரில் பஸ் கண்ணாடியை உடைத்த கல்லூரி மாணவர்கள் 4 பேர் கைது


அம்பத்தூரில் பஸ் கண்ணாடியை உடைத்த  கல்லூரி மாணவர்கள் 4 பேர் கைது
x
தினத்தந்தி 20 Feb 2019 1:47 AM IST (Updated: 20 Feb 2019 1:47 AM IST)
t-max-icont-min-icon

அம்பத்தூரில் பஸ் கண்ணாடியை உடைத்த கல்லூரி மாணவர்கள் 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

அம்பத்தூர்,

சென்னை அண்ணா சதுக்கத்தில் இருந்து பட்டாபிராம் நோக்கி கடந்த 13-ந் தேதி தடம் எண் 27 எச் மாநகர பஸ் சென்று கொண்டிருந்தது. அம்பத்தூரில் உள்ள மண்ணூர்பேட்டை அருகே வந்த போது 2 மோட்டார் சைக்கிள்களில் பின்தொடர்ந்து வந்த 4 பேர் பஸ் கண்ணாடிகளை கத்தியால் தாக்கி உடைத்து நொறுக்கினர். இதுகுறித்து அம்பத்தூர் எஸ்டேட் போலீசில் கண்டக்டர் பால்வர்ணன் புகார் கொடுத்தார்.

அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், அந்த சாலையில் இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை சோதனை செய்தனர். அதில், பச்சையப்பன் கல்லூரியில் படித்து வந்த அய்யப்பாக்கத்தைச் சேர்ந்த சிவபாரதி (வயது 20), சரவணன் (20), கோபி (19), மற்றும் திருவள்ளூரைச் சேர்ந்த யுவராஜ் (20) என தெரியவந்தது. இதையடுத்து, 4 பேரையும் போலீசார் பிடித்து விசாரித்தனர்.

விசாரணையில், அவர்கள் அதே பஸ்சில் பயணம் செய்த மற்றொரு கல்லூரி மாணவர்களை தாக்க வந்ததாகவும், பஸ்சை நிறுத்தாமல் சென்றதால் ஆத்திரத்தில் கத்திகளால் கண்ணாடிகளை அடித்து உடைத்ததாகவும் தெரிவித்தனர்.

இதனையடுத்து 4 பேரையும் கைது செய்த போலீசார், அவர்கள் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள்கள் மற்றும் 3 கத்திகளை பறிமுதல் செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

Next Story