அடுக்குமாடி குடியிருப்பில் கார், மோட்டார் சைக்கிள் எரிந்து நாசம்
அடுக்குமாடி குடியிருப்பில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த கார் மற்றும் மோட்டார் சைக்கிள் எரிந்து நாசமானது.
திரு.வி.க.நகர்,
பெரம்பூர் அருகே உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த கார் மற்றும் மோட்டார் சைக்கிள் எரிந்து நாசமானது. 2 வாகனங்களிலும் தீப்பிடிக்க காரணம் என்ன? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தீப்பிடித்து எரிந்த கார்
சென்னை பெரம்பூர் அடுத்த பெரியார் நகர் 8-வது தெருவில் அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. புதிதாக கட்டப்பட்ட இந்த குடியிருப்பில் 6 வீடுகள் உள்ளன. 3 வீடுகள் காலியாக உள்ள நிலையில் மற்ற வீடுகளில் சிலர் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் கீழ்தளத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த கார் ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்தது. அந்த தீ அருகில் இருந்த மோட்டார் சைக்கிளிலும் பரவியது.
உடனே அங்கிருந்தவர்கள் போலீசாருக்கும், தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் தெரிவித்தனர். உடனே பெரவள்ளூர் இன்ஸ்பெக்டர் சிட்டிபாபு மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். மேலும் செம்பியம், வியாசர்பாடி தீயணைப்பு நிலையங்களில் இருந்து 3 தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டன. தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து கார் மற்றும் மோட்டார் சைக்கிளில் எரிந்த தீயை அணைத்தனர். இருப்பினும் காரும், மோட்டார் சைக்கிளும் எரிந்து நாசமாகி விட்டன.
குடியிருப்புவாசிகள் தவிப்பு
அடுக்குமாடி குடியிருப்பின் கீழ்தளத்தில் கார் தீப்பிடித்து எரிந்ததால் மேல்தளத்தில் வசித்தவர்கள் வீட்டை விட்டு வெளியே வரமுடியாமல் தவித்தனர். தீ முழுவதுமாக அணைக்கப்பட்ட பின்னர், அவர்கள் பாதுகாப்பாக கீழே இறக்கி விடப்பட்டனர்.
எரிந்து சேதம் அடைந்த மோட்டார் சைக்கிள் அதே குடியிருப்பில் வசித்து வரும் ராஜகோபாலன் என்பவருக்கு சொந்தமானதாகும். தீப் பிடித்து எரிந்த கார் அடையாறை சேர்ந்த அவரது நண்பர் வெங்கடசுப்ரமணியன் என்பவருடையது.
காரணம் என்ன?
அதே பகுதியில் இருந்த ஓட்டல் ஊழியர்கள் 4 பேர் தீயணைப்பு வாகனம் வருவதற்குமுன்பே துரிதமாக செயல்பட்டு அருகில் இருந்த வாகனங்களை அப்புறப்படுத்தியதால் மேலும் 2 கார்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் தீ விபத்தில் இருந்து தப்பின.
நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் எப்படி திடீரென தீப்பிடித்து எரிந்தது?, நாசவேலை காரணமா? அல்லது காரில் ஏற்பட்ட கோளாறால் தீப்பிடித்ததா? என்று போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story