குளித்தலை கடம்பவனேசுவரர் கோவில் மாசிமக தேரோட்டம் திரளான பக்தர்கள் பங்கேற்பு


குளித்தலை கடம்பவனேசுவரர் கோவில் மாசிமக தேரோட்டம் திரளான பக்தர்கள் பங்கேற்பு
x
தினத்தந்தி 20 Feb 2019 4:00 AM IST (Updated: 20 Feb 2019 2:08 AM IST)
t-max-icont-min-icon

குளித்தலை கடம்பவனேசுவரர் கோவில் மாசிமக தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

குளித்தலை,

குளித்தலையில் உள்ள கடம்பவனேசுவரர் கோவிலில் மாசி மக திருவிழா கடந்த 10-ந் தேதி விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கியது. 11-ந் தேதி கொடி ஏற்றப்பட்டது. அதனைத்தொடர்ந்து தினமும் காலை பல்லக்கில் சுவாமி வீதி உலா நடைபெற்றது. இரவு நந்தி, யாளி, பூதம், அன்னம், கைலாச, கமல, வெள்ளி, ரிஷப, யானை, கிளி, இந்திர விமானம், குதிரை ஆகிய வாகனங்களில் உற்சவர் சுவாமி வீதி உலா நடைபெற்றது.

திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நேற்று காலை நடைபெற்றது. இதையொட்டி, உற்சவருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. பின்னர், பலவகை பூக்களால் அலங்கரிக்கப்பட்ட உற்சவர் சுவாமிகள் தேரில் எழுந்தருளினர். பின்னர், 10.30 மணியளவில் தேரோட்டம் தொடங்கியது.

வடம் பிடித்த பக்தர்கள்

இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். கோவிலை சுற்றியுள்ள 4 வீதிகள் வழியாக வந்த தேர், 12 மணியளவில் நிலையை அடைந்தது. தேரோட்டத்தின்போது பக்தர்கள் தேங்காய், பூ, பழம் வைத்து சுவாமியை வழிபட்டனர். தேரோட்டத்தையொட்டி பல இடங்களில் அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு சாமி வீதிஉலா நடைபெற்றது.

இன்று(புதன்கிழமை) குளித்தலை கடம்பந்துறை காவிரி ஆற்றில் தீர்த்தவாரி நடக்கிறது. 

Next Story