சென்டிரல், எழும்பூர் ரெயில் நிலையங்களின் தூய்மை பணியில் புதிய நடைமுறை பயணிகளின் கருத்து கேட்டு உடனடி நடவடிக்கை
சென்னை சென்டிரல் மற்றும் எழும்பூர் ரெயில் நிலையங்களில் நடைபெறும் தூய்மை பணியில் புதிய நடைமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது.
சென்னை,
இந்திய ரெயில்வே சார்பில் பயணிகள் வசதிக்காக பல்வேறு சிறப்பு அம்சங்களை செய்து வருகிறது. அந்த வகையில் ரெயில் நிலையங்களை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் பராமரிக்க தனியார் நிறுவனத்துக்கு ஒப்பந்த அடிப்படையில் பணி கொடுக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த தனியார் நிறுவனங்கள் சரியாக செயல்படுகிறதா? என்று பயணிகளிடம் கருத்து கேட்க உத்தரவிட்டுள்ளது. அதன் அடிப்படையில் தெற்கு ரெயில்வே சார்பில் சென்னை சென்டிரல் மற்றும் எழும்பூர் ரெயில் நிலையங்களின் தூய்மை பணி குறித்து பயணிகளிடம் கருத்து கேட்கப்பட்டு வருகிறது.
மதிப்பெண் கொடுக்கவேண்டும்
இந்த கருத்து கேட்கும் பணியில் சென்டிரல் ரெயில் நிலையத்தில் 2 ரெயில்வே ஒப்பந்த ஊழியர்களும், எழும்பூர் ரெயில் நிலையத்தில் ஒரு ரெயில்வே ஒப்பந்த ஊழியரும் ஈடுபட்டு வருகின்றனர். இந்த ஊழியர்கள் ரெயில் நிலையங்களுக்கு வரும் பயணிகளிடம் அவர்களது பி.என்.ஆர். எண், பெயர் உள்ளிட்ட தகவல்களை பெறவேண்டும். பின்னர் ரெயில் நிலையத்தின் தூய்மை பணி குறித்து கேட்கப்படும் கேள்விகளுக்கு, பயணிகள் 1 முதல் 5 மதிப்பெண் அளிக்கவேண்டும். மேலும் அவர்கள் குறித்த தகவல்களையும், கருத்துகள் மற்றும் குறைகளையும், கருத்து கேட்கும் ஊழியர் தங்களிடம் உள்ள ‘டேப்-லெட்’ மூலம் ஆன்-லைனில் பதிவு செய்ய வேண்டும்.
அவ்வாறு பதியப்பட்ட கருத்துகள் ரெயில்வே துறைக்கு நேரடியாக அனுப்பப்படும். ஒரு நாளைக்கு சென்டிரல் ரெயில் நிலையத்தில் 100 பயணிகளிடமும், எழும்பூர் ரெயில் நிலையத்தில் 60 பேரிடமும், கருத்து கேட்கப்பட வேண்டும் என்று தெற்கு ரெயில்வே உத்தரவிட்டுள்ளது.
இந்த திட்டம் குறித்து ரெயில்வே அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
30 சதவீதம்
ரெயில் நிலையங்களில் தூய்மை பணி குறித்து பயணிகளிடம் கருத்து கேட்கும் முறையை சோதனை அடிப்படையில் தொடங்கியுள்ளோம். இந்த திட்டத்தின் மூலம் பயணிகள், ரெயில் நிலையங்களில் சுகாதாரமற்ற இடங்கள், சுத்தமற்ற கழிப்பறைகள் போன்றவைகள் குறித்த குறைகளை ரெயில்வேயிடம் தெரிவிக்கமுடியும். அவ்வாறு தெரிவிக்கப்பட்ட குறைகளை 10 முதல் 20 நிமிடங்களில் ஊழியர்கள் சுத்தம் செய்து முடிக்கவேண்டும். பின்னர் பயணிகள் கூறிய குறைகளுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து ரெயில்வே நிர்வாகத்திடம் தெரிவிக்கவேண்டும்.
இதையடுத்து அந்த குறைகள் நிவர்த்தி செய்யப்பட்டது என பயணியின் செல்போனுக்கு செய்தி அனுப்பப்படும். மேலும் ரெயில் நிலையத்தின் சுத்தம் குறித்து 4 மதிபெண்களுக்கு கீழ் பெற்றாலோ அல்லது பயணிகள் கூறிய குறைகளை 10 முதல் 20 நிமிடத்தில் சரி செய்யாமல் விட்டாலோ ரெயில்வே நிர்வாகம் ஒப்பந்த நிறுவனத்துக்கு கொடுக்கப்படும் நிதியில் 30 சதவீதம் வரை பிடித்தம் செய்யும். மேலும் இந்த திட்டம் தெற்கு ரெயில்வேக்கு உட்பட்ட மற்ற ரெயில் நிலையங்களிலும் கூடிய விரைவில் செயல்படுத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story