போலீஸ் துணை சூப்பிரண்டு வீடு, அலுவலகத்தில் ரூ.4.34 லட்சம் சிக்கியது லஞ்ச ஒழிப்பு போலீசார் நள்ளிரவு வரை சோதனை


போலீஸ் துணை சூப்பிரண்டு வீடு, அலுவலகத்தில் ரூ.4.34 லட்சம் சிக்கியது லஞ்ச ஒழிப்பு போலீசார் நள்ளிரவு வரை சோதனை
x
தினத்தந்தி 20 Feb 2019 3:45 AM IST (Updated: 20 Feb 2019 2:53 AM IST)
t-max-icont-min-icon

கிருஷ்ணகிரியில் போலீஸ் துணை சூப்பிரண்டு வீடு மற்றும் அலுவலகத்தில் நள்ளிரவு வரை லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையில் கணக்கில் வராத ரூ.4.34 லட்சம் சிக்கியது.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி போலீஸ் துணை சூப்பிரண்டாக பணியாற்றி வந்தவர் கண்ணன். இவர் நேற்று முன்தினம் கோவை மாநகர நில அபகரிப்பு தடுப்பு பிரிவுக்கு இடமாற்றம் செய்யப்பட்டு இருந்தார். அங்கு அவர் பணியில் சேரவில்லை. இந்த நிலையில், நேற்று முன்தினம் மாலை கிருஷ்ணகிரியில் பழையபேட்டை சாலையில் உள்ள போலீஸ் துணை சூப்பிரண்டு கண்ணனின் அலுவலகம் மற்றும் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடியாக சோதனை நடத்தினார்கள்.

கிருஷ்ணகிரி லஞ்ச ஒழிப்பு போலீஸ் துணை சூப்பிரண்டு கிருஷ்ணராஜ் தலைமையிலான போலீசார் இந்த சோதனையை நடத்தினார்கள். சுமார் 6 மணி நேரம் இந்த சோதனை நடந்தது. இதில் கணக்கில் வராத ரூ.4 லட்சத்து 34 ஆயிரத்து 500 பறிமுதல் செய்யப்பட்டது. முன்னதாக இந்த சோதனையை முன்னிட்டு போலீஸ் துணை சூப்பிரண்டு அலுவலக நுழைவுவாயில் மூடப்பட்டது. மேலும் யாரும் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. அதே போல உள்ளே இருந்து யாரும் வெளியே செல்ல அனுமதிக்கப்படவில்லை.

இந்த சோதனையின் போது போலீஸ் துணை சூப்பிரண்டு கண்ணனும் அலுவலகத்தில் இருந்தார். அவரிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தினார்கள். நள்ளிரவு 1 மணி வரை இந்த சோதனை நடைபெற்றது. கண்ணன் ஆரம்பத்தில் சேலம் மாநகரில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி பிறகு கிருஷ்ணகிரி போலீஸ் துணை சூப்பிரண்டாக பதவி உயர்வு பெற்றார்.

கிருஷ்ணகிரியில் ஆரம்பத்தில் போலீஸ் துணை சூப்பிரண்டாக பணியாற்றிய அவர், பிறகு சேலத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டு மீண்டும் கிருஷ்ணகிரிக்கு பணி அமர்த்தப்பட்டார். தற்போது லஞ்ச புகார் காரணமாக இந்த சோதனை நடத்தப்பட்டதாக லஞ்ச ஒழிப்பு போலீஸ் வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது. இந்த சம்பவம் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் காவல் துறையினரிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story