பெங்களூரு சர்வதேச விமான கண்காட்சி மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் இன்று தொடங்கி வைக்கிறார்


பெங்களூரு சர்வதேச விமான கண்காட்சி மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் இன்று தொடங்கி வைக்கிறார்
x
தினத்தந்தி 19 Feb 2019 11:30 PM GMT (Updated: 19 Feb 2019 9:25 PM GMT)

12-வது பெங்களூரு சர்வதேச விமான கண் காட்சியை மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் இன்று (புதன்கிழமை) தொடங்கி வைக்கிறார். இந்த விமான கண்காட்சி 5 நாட்கள் நடக்கிறது.

பெங்களூரு,

இந்திய ராணுவத்துறை சார்பில் 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை சர்வதேச விமான கண்காட்சி பெங்களூருவில் நடத்தப்பட்டு வருகிறது. கடைசியாக கடந்த 2017-ம் ஆண்டு இந்த கண்காட்சி நடந்தது.

இந்த நிலையில் 12-வது பெங்களூரு சர்வதேச விமான கண்காட்சி பெங்களூரு எலகங்கா விமானப்படை தளத்தில் நடைபெற உள்ளது. இதன் தொடக்க விழா பெங்களூரு எலகங்கா விமானப்படை தளத்தில் இன்று (புதன்கிழமை) காலை 9 மணிக்கு நடக்கிறது. இதில் ராணுவத்துறை மந்திரி நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டு விமான கண்காட்சியை தொடங்கி வைக்கிறார். விழாவில் முதல்-மந்திரி குமாரசாமி உள்பட மந்திரிகள் பலர் கலந்து கொள்கிறார்கள்.

தொடக்க விழா முடிவடைந்ததும், போர் விமானங்கள் சாகச நிகழ்ச்சி நடக்கிறது. இதில் இந்திய விமானப்படை விமானங்கள் மற்றும் வெளிநாட்டு விமானங்கள் கலந்து கொள்கின்றன. சுமார் 1 மணி நேரம் இந்த நிகழ்ச்சி நடைபெறும். பிறகு மதியம் 2 மணி முதல் மாலை 5.30 மணி வரை விமான சாகச நிகழ்ச்சி நடக்கிறது.

இந்த கண்காட்சியில் 403 விமான உற்பத்தி நிறுவனங்கள் கலந்துகொள்ள முன்பதிவு செய்துள்ளன. அந்த நிறுவனங்கள் தங்களின் உற்பத்தி குறித்து அரங்குகளை அமைத்துள்ளன. 61 விமானங்கள் கண்காட்சியில் பார்வையாளர்களுக்கு வைக்கப்பட்டுள்ளன.

இந்த நிறுவனங்களுக்கான அரங்குகளை அமைக்க 28 ஆயிரத்து 398 சதுர மீட்டர் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா, இங்கிலாந்து, ரஷியா, உக்ரைன், சவுதி அரேபியா, ஜெர்மனி, இத்தாலி, இஸ்ரேல் உள்பட 30-க்கும் மேற்பட்ட நாடுகளின் விமான உற்பத்தி நிறுவனங்கள் கலந்து கொள்கின்றன.

முதல் நாளில், அதாவது இ்ன்று விமான உற்பத்தி நிறுவனங்களின் அதிகாரிகள் மாநாடு நடக்கிறது. நாளை (வியாழக்கிழமை) மதியம் 10 மணிக்கு ஆளில்லா விமான ஒலிம்பிக் போட்டிகள் நடக்கின்றன. மதியம் 2.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை விமான சாகச நிகழ்ச்சி நடக்கிறது.

அதன்பிறகு இந்தியா மற்றும் பிரான்சு நாடுகள் பாதுகாப்புத்துறையில் அளித்து வரும் ஒத்துழைப்பு குறித்த கருத்தரங்கம் எலகங்காவில் நடக்கிறது. 22-ந் தேதி காலை 10 மணி முதல் 12 மணி வரை விமான சாகச நிகழ்ச்சி நடக்கிறது.

உலக அளவில், இந்திய விமானப்படை சார்பில் விமானங்களை உற்பத்தி செய்து விநியோகிப்பது குறித்த கருத்தரங்கம் நடக்கிறது. விமானத்துறையில் பெண்களின் பங்கு என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடக்கிறது. 23-ந் தேதி காலை 10 மணி முதல் 12 மணி வரை விமான சாகச நிகழ்ச்சி நடக்கிறது. பகல் 12 மணிக்கு மகளிர் தின விழா எலகங்காவில் உள்ள மாநாட்டு அரங்கத்தில் நடக்கிறது.

இந்த விழாவில் பெண் சாதனையாளர்கள் பாராட்டி கவுரவிக்கப்படுவார்கள். விமானத்துறையில் பெண்களின் பங்கு குறித்த புத்தகம் வெளியிடப்படுகிறது. விமானத்துறையில் சைபர் பாதுகாப்பு குறித்த கருத்தரங்குக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மதியம் 2 மணி முதல் மாலை 5.30 மணி வரை விமான சாகச நிகழ்ச்சி நடக்கிறது. இந்த கண்காட்சியின் கடைசி நாளான 24-ந் தேதி காலை 10 மணி முதல் 12 மணி வரை விமான சாகசங்கள் நடக்கின்றன. மதியம் 12 மணிக்கு கண்காட்சி நிறைவு விழா எலகங்காவில் நடக்கிறது.

இதில் மாணவர்கள் உருவாக்கிய சிறந்த திட்டங் களுக்கு விருது வழங்கப்படுகிறது. நிறைவு விழாவில் கவர்னர் வஜூபாய் வாலா கலந்து கொண்டு பேசுகிறார்.

இந்த விமான கண்காட்சியையொட்டி எலகங்கா விமானப்படை தளத்தை சுற்றிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அடையாள அட்டை உள்ளவர்களுக்கு மட்டுமே உள்ளே செல்ல அனுமதி வழங்கப்படும்.

பெங்களூருவில் இன்று முதல் 5 நாட்களுக்கு உலோக பறவைகள் வானில் வர்ண ஜாலத்தை நடத்தவுள்ளன. இதை காண பெங்களூரு மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களை சேர்ந்தவர்கள் பெங்களூருவுக்கு வரவுள்ளனர். பெங்களூரு நகரில் இருந்து எலகங்கா செல்லும் ரோட்டில் வாகன நெரிசல் ஏற்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

‘சூர்யகிரண்’ வகையை சேர்ந்த 2 விமானங்கள் நேற்று விபத்தில் சிக்கி ஒரு விமானி மரணம் அடைந்தது, விமானிகள் இடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.

Next Story