கடலூரில் சோக சம்பவம் 2 மகன்களை கொன்று தாய் தற்கொலை


கடலூரில் சோக சம்பவம் 2 மகன்களை கொன்று தாய் தற்கொலை
x
தினத்தந்தி 19 Feb 2019 11:30 PM GMT (Updated: 19 Feb 2019 9:56 PM GMT)

கடலூரில் 2 மகன்களை கொன்று தாய் தற்கொலை செய்து கொண்டார். இதற்கு காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சோக சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

கடலூர்,

கடலூர் பாதிரிக்குப்பம் டி.ஆர்.நகரை சேர்ந்தவர் மதிவாணன். இவர் கூத்தப்பாக்கம் மெயின்ரோட்டில் மருந்து கடை வைத்துள்ளார். இவரும், கூத்தப்பாக்கத்தை சேர்ந்த சிவசங்கரி(வயது 32) என்பவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு பாவேஷ் கண்ணா(12), ரதீஷ் கண்ணா (9) ஆகிய 2 மகன்கள் இருந்தனர். இதில் பாவேஷ்கண்ணா தனியார் பள்ளியில் 7-ம் வகுப்பும், அதே பள்ளியில் ரதீஷ்கண்ணா 4-ம் வகுப்பும் படித்து வந்தனர்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் காலை வழக்கம் போல் மதிவாணன் தன்னுடைய மருந்து கடைக்கு வந்தார். அங்கு வியாபாரம் முடிந்ததும், கடையை பூட்டிவிட்டு இரவு 11 மணி அளவில் வீட்டுக்கு சென்றார்.

அப்போது வீட்டுக்கதவு உள்புறமாக பூட்டி இருந்தது. இதனால் மதிவாணன் கதவை தட்டினார். ஆனால் சிவசங்கரி எழுந்து வரவில்லை. செல்போனில் அழைத்தும் அவர் எடுக்கவில்லை. பின்னர் நீண்ட நேரம் கழித்து, பக்கத்து வீட்டை சேர்ந்தவரை எழுப்பி வந்தார். பின்னர் அவரும் சேர்ந்து கதவை தட்டியும் திறக்கவில்லை. இதனால் சந்தேகமடைந்த அவர்கள் கதவை உடைத்து உள்ளே சென்றனர். அப்போது வீட்டு படுக்கை அறையில் சிவசங்கரி தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார். அவருக்கு கீழே 2 குழந்தைகளும் இறந்து கிடந்தனர். அவர்கள் மீது பூக்கள் தூவப்பட்டு இருந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த மதிவாணன், அவர்களின் உடலை பார்த்து கதறி அழுதார். சத்தம் கேட்டதும் அக்கம், பக்கத்தில் உள்ளவர்களும் அங்கே கூடினர்.

இது பற்றி திருப்பாதிரிப்புலியூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால் போலீசார் யாரும் செல்லவில்லை. இந்நிலையில் நேற்று போலீஸ் இன்ஸ்பெக்டர் உதயகுமார், சப்-இன்ஸ்பெக்டர் சிவக்கொழுந்து மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் சிவசங்கரி, தனது 2 மகன்களை கொன்று விட்டு தானும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. மேலும் அந்த அறையில் சோதனையிட்டனர். அப்போது சிவசங்கரி தனது கணவர், தங்கை, தாய் மற்றும் போலீசாருக்கு தனித்தனியாக எழுதியிருந்த 4 கடிதங்கள் சிக்கியது. அந்த கடிதத்தை போலீசார் கைப்பற்றினர். பின்னர் இறந்த 3 பேரின் உடல்களையும் போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களது உடல்கள் பிரேத பரிசோதனைக்காக பிணவறையில் வைக்கப்பட்டது. பின்னர் இது பற்றி சிவசங்கரியின் தாய் சுமதி திருப்பாதிரிப்புலியூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து குடும்ப பிரச்சினை காரணமாக 2 மகன்களையும் கொன்று சிவசங்கரி தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என்பது குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story