தாராபுரம் பஸ் நிலையத்தில் இருக்கை வசதி இல்லாமல் பயணிகள் அவதி நடவடிக்கை எடுக்க கோரிக்கை
தாராபுரம் பஸ் நிலையத்தில் பயணிகள் அமருவதற்கு போதிய இருக்கை வசதி இல்லாததால் அவதிப்பட்டு வருகிறார்கள். எனவே தேவையான இருக்கை வசதி செய்து தரவேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தாராபுரம்,
திருப்பூர், கோவை, நீலகிரி ஆகிய மாவட்டங்களிலிருந்து தென்மாவட்டங்களுக்குச் செல்லும் தொலைதூர பஸ்கள் அனைத்தும் தாராபுரம் வழியாகத்தான் சென்று வருகிறது, மேலும் உள்ளூர் பஸ்கள், டவுன் பஸ்கள் என நாளொன்றுக்கு சுமார் 950 பஸ்கள் இந்த பஸ் நிலையத்திற்கு வந்து செல்கின்றன. இதனால் பஸ் நிலையத்திற்கு வந்துபோகும் பொது மக்கள் மற்றும் பயணிகளின் எண்ணிக்கையும் அதிகமாக இருந்து வருகிறது.
பஸ் நிலையத்தை பொருத்தவரை போதுமான அடிப்படை வசதிகள் செய்யப்படவில்லை. பொதுவாக மற்ற பஸ் நிலையங்களில் பயணிகள் அமருவதற்கு இருக்கை வசதிகள் செய்யப்பட்டிருக்கும். ஆனால் இந்த பஸ் நிலையத்தில் இருக்கை வசதிகள் எதுவும் செய்யப்படவில்லை. பஸ் நிலையம் கட்டப்பட்டபோது, சில இடங்களில் சிமெண்டு இருக்கைகள் கட்டப்பட்டன. தற்போது அந்த இருக்கைகள் சிலவற்றை அங்குள்ள கடைக்காரர்கள் ஆக்கிரமிப்பு செய்துள்ளார்கள்.
மீதியுள்ள இருக்கைகளை குடிகாரர்களும், மனநலம் பாதிக்கப்பட்டவர்களும் பகலில் படுத்துக்கொண்டு, பயணிகளை அமரவிடுவதில்லை. பஸ் நிலையத்தில் நடைபாதை மட்டுமே மீதி இருந்தது. பஸ் நிலையத்திற்கு இரு சக்கர வாகனங்களில் வருபவர்கள் தங்கள் இருசக்கர வாகனங்களை வெயிலில் நிறுத்தக்கூடாது என்பதற்காக, பஸ் நிலையத்தில் உள்ள நடைபாதைகளில் நிறுத்தி வைத்து விடுகிறார்கள்.
இதனால் பஸ் நிலையத்தில் நடைபாதையும் பயணிகள் பயன்படுத்த முடிவதில்லை. பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகள் குறிப்பாக முதியவர்கள், கர்ப்பிணி பெண்கள், தாய்மார்கள், குழந்தைகள் என பலரும் அமருவதற்கு இருக்கைகள் இல்லாததால் அவதிப்படுகிறார்கள். இன்னும் சொல்லப்போனால் பஸ் நிலையத்தில் நிற்பதற்கும் கூட இடமில்லாமல் பொதுமக்கள் சிரமப்படுகிறார்கள்.
எனவே நகராட்சி நிர்வாகம் பஸ் நிலையத்தின் மேம்பாட்டிற்கு போதுமான நிதி ஒதுக்கி, பஸ் நிலையத்தில் பயணிகள் அமருவதற்கு இருக்கைகள், சுத்தமான குடிநீர், சுகாதாரமான கழிப்பிடம், போதுமான மின்விளக்கு போன்ற வசதிகளை உடனடியாக செய்து தரவேண்டும் என்று பொதுமக்கள் கூறினார்கள்.