நிலுவைத்தொகை வழங்காததால் சர்க்கரை ஆலையை கண்டித்து கரும்பு விவசாயிகள் சாலை மறியல்
நிலுவைத்தொகை வழங்காததால் சர்க்கரை ஆலையை கண்டித்து கரும்பு விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
பெண்ணாடம்,
பெண்ணாடம் அருகே இறையூரில் தனியார் சர்க்கரை ஆலை உள்ளது. இந்த சர்க்கரை ஆலை நிர்வாகம் கடந்த 2016-17, 2017-18 ஆண்டுகளில் கரும்பு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத்தொகையை வழங்காமல் ரூ.86 கோடியை பாக்கி வைத்துள்ளது.
இந்த தொகையை வழங்கக்கோரியும், விவசாயிகள் பெயரில் ஆலை நிர்வாகம் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் வாங்கிய ரூ.26 கோடி கடனை உடனடியாக அடைக்கக்கோரியும் சர்க்கரை ஆலை அலுவலகம் முன்பு விவசாயிகள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனை தொடர்ந்து திட்டக்குடி-விருத்தாசலம் சாலையில் இறையூர் பஸ் நிறுத்தத்தில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் பெண்ணாடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ்பாபு மற்றும் போலீசார் விரைந்து சென்று, சாலை மறியலில் ஈடுபட்ட விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது போலீசார், உங்களது கோரிக்கைகள் தொடர்பாக ஆலை நிர்வாகத்திடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக கூறினர். இதையடுத்து மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். விவசாயிகளின் போராட்டத்தால் அந்த சாலையில் 30 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Related Tags :
Next Story