திருப்பத்தூர் அருகே விபத்து மரத்தில் மோதி வேன் நொறுங்கியது; பெண் பலி 15 பேர் படுகாயம்


திருப்பத்தூர் அருகே விபத்து மரத்தில் மோதி வேன் நொறுங்கியது; பெண் பலி 15 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 20 Feb 2019 4:01 AM IST (Updated: 20 Feb 2019 4:01 AM IST)
t-max-icont-min-icon

சாலையோரம் நின்ற மரத்தில் மோதியதால் வேன் நொறுங்கியது. இதில் பெண் ஒருவர் பலியானார். மேலும் 15 பேர் படுகாயம் அடைந்தனர்.

திருப்பத்தூர்,

சிவகங்கை மாவட்டம் திருக்கோஷ்டியூரில் நடைபெறும் மாசிமகத் தெப்ப உற்சவத்தைக் காண தூத்துக்குடியிலிருந்து ஒரு வேன் மூலம் 17 பேர் நள்ளிரவு 12 மணிக்கு புறப்பட்டு வந்தனர். வேன் திருப்பத்தூர் அருகே கருப்பூர் என்ற இடத்தில் நேற்று அதிகாலை 5.30 மணிக்கு வந்து கொண்டிருந்தது.

இந்த நிலையில் எதிர்பாராத விதமாக ரோட்டின் ஓரத்தில் இருந்த புளியமரத்தில் வேன் மோதி நொறுங்கியது. வேனின் மேற்பகுதி அப்படியே பெயர்ந்து விழுந்தது. அப்போது வேனை ஓட்டி வந்த டிரைவர் தவறி கீழே விழுந்தார். டிரைவர் இல்லாமல் சிறிது தூரம் ஓடிய வேன், ஒரு வீட்டின் அருகே போய் நின்றது.

அந்த வேனில் இருந்த அனைவரும் அலறி சத்தம் போட்டனர். இந்த சம்பவத்தில் வள்ளி (வயது 45) என்பவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து, விபத்தில் படுகாயம் அடைந்த ஆறுமுகம்(50), பொன்னம்மாள்(51), தங்கவேல்(19), தெய்வானைசுந்தரி(46), சுந்தரியம்மாள்(65), வேனை ஓட்டி வந்த டிரைவர் பாலாசீர்(44) உள்பட 15 பேரை வேனில் இருந்து மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவர்களுக்கு முதல் உதவி அளிக்கப்பட்டு, மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி ஆஸ்பத்திரிக்கு கொண்டு வரப்பட்டனர். இந்த விபத்து குறித்து திருப்பத்தூர் நகர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


Next Story