நாடாளுமன்ற தேர்தல்: பழைய குற்றவாளிகள் தீவிர கண்காணிப்பு தென்மண்டல ஐ.ஜி. சண்முகராஜேஸ்வரன் தகவல்


நாடாளுமன்ற தேர்தல்: பழைய குற்றவாளிகள் தீவிர கண்காணிப்பு தென்மண்டல ஐ.ஜி. சண்முகராஜேஸ்வரன் தகவல்
x
தினத்தந்தி 19 Feb 2019 11:00 PM GMT (Updated: 19 Feb 2019 10:51 PM GMT)

நாடாளுமன்ற தேர்தலையொட்டி பழைய குற்றவாளிகளின் பட்டியலை தயாரித்து அவர்களின் நடவடிக்கைகள் கண்காணிக்கப்படுவதாக தென்மண்டல ஐ.ஜி. சண்முகராஜேஸ்வரன் கூறினார்.

சிவகாசி,

சிவகாசி டவுன் காவல் நிலையத்துக்கு உட்பட்ட விஸ்வநத்தம் பகுதியில் விருதுநகர் மாவட்ட போலீஸ் நிர்வாகத்தின் ஆலோசனையின் பேரில் புறக்காவல் நிலையம் அமைக்கப்பட்டது. இதன் திறப்பு விழா நேற்று காலை நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட தென்மண்டல ஐ.ஜி. சண்முகராஜேஸ்வரன் புறக்காவல் நிலையத்தை திறந்து வைத்து அங்கு மரக்கன்றுகளை நட்டு வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

சிவகாசி உட்கோட்டத்தில் போலீசாருக்கு விரைவில் புதிய குடியிருப்புகள் கட்டிக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். அதே போல் போலீசாருக்கான மருத்துவமனைக்கு புதிய கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். நாடாளுமன்ற தேர்தல் அமைதியான முறையில் நடைபெற வசதியாக பழைய குற்றவாளிகளின் பட்டியல் தயாரிக்கப்பட்டு அவர்களின் நடவடிக்கைகள் தீவிரமாக கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தேர்தல் அமைதியான முறையில் நடக்க அனைத்து நடவடிக்கைகளும் போலீசார் சார்பில் செய்யப்பட்டுள்ளது. பொதுமக்களும் போலீசாருடன் ஒத்துழைத்து தேர்தலை அமைதியான முறையில் நடக்க உதவிட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இதனை தொடர்ந்து சிவகாசி கார் ஸ்டேண்டு அருகில் கண்காணிப்பு மையத்தை அவர் திறந்து வைத்தார். சிவகாசி நகர் காவல் நிலையம், டவுன் காவல் நிலையத்தில் உதவும் உள்ளங்கள் என்ற பழைய பொருட்கள் சேகரித்து தேவைப்படுவோருக்கு வழங்கும் மையம், சிவகாசி துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புதியதாக அமைக்கப்பட்ட பூங்காவும் திறக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் மதுரை சரக டி.ஐ.ஜி. பிரதீப்குமார், விருதுநகர் போலீஸ் சூப்பிரண்டு ராஜராஜன், சிவகாசி டவுன் இன்ஸ்பெக்டர் பாஸ்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story