பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நல்லொழுக்கம், வாழ்வியல் நெறிமுறைகளை போதிக்கும் திரைப்படம் கலெக்டர் ரோகிணி தொடங்கி வைத்தார்


பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நல்லொழுக்கம், வாழ்வியல் நெறிமுறைகளை போதிக்கும் திரைப்படம் கலெக்டர் ரோகிணி தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 20 Feb 2019 10:00 PM GMT (Updated: 20 Feb 2019 4:57 PM GMT)

பள்ளி மாணவ–மாணவிகளுக்கு நல்லொழுக்கம், வாழ்வியல் நெறிமுறைகளை போதிக்கும் திரைப்படத்தை நேற்று மாவட்ட கலெக்டர் ரோகிணி தொடங்கி வைத்தார்.

சேலம், 

சேலம் மாவட்ட நிர்வாகம் மற்றும் இந்திய குழந்தைகள் திரைப்பட சங்கம் சார்பில் பள்ளி மாணவ–மாணவிகளுக்கு நல்லொழுக்கம், வாழ்வியல் நெறிமுறைகளை போதிக்கும் குழந்தைகள் திரைப்பட விழா சேலம் ஏ.ஆர்.ஆர்.எஸ். மல்டி பிளக்ஸ் தியேட்டரில் நேற்று நடந்தது. இதில் மாவட்ட கலெக்டர் ரோகிணி கலந்துகொண்டு குழந்தைகள் திரைப்பட விழாவை தொடங்கி வைத்து பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:–

இந்த குழந்தைகள் திரைப்பட விழாவில், எங்களாலும் முடியும், மல்லி, துபாஷி மற்றும் முதலை ஆகிய நான்கு படங்கள் திரையிடப்படுகிறது. 3 நாட்கள் நடைபெறும் இந்த குழந்தைகள் திரைப்பட விழாவில் சேலம் மாவட்டத்தில் உள்ள 27 திரையரங்குகளில் 81 காட்சிகள் மாவட்டம் முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவ–மாணவிகளுக்கு கட்டணமின்றி இலவசமாக திரையிட்டுக் காண்பிக்கப்பட உள்ளது.

சேலம் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் 6–ம் வகுப்பு முதல் 9–ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ–மாணவிகளுக்கு கல்வி மற்றும் தேர்வுகள் பாதிக்காத வகையில் அட்டவணை தயார் செய்து, அருகில் உள்ள திரையரங்குகளின் இருக்கைக்கு ஏற்றவாறு பள்ளி குழந்தைகள் அனுமதிக்கப்படுவார்கள். சேலம் மாவட்டம் முழுவதும் உள்ள 114 பள்ளிகளில் பயிலும் 51 ஆயிரத்து 936 மாணவ, மாணவிகளுக்கு இக்குழந்தைகள் திரைப்படமானது திரையிடப்படுகிறது.

பள்ளி குழந்தைகளை அழைத்து வரும்போது உடன் ஆசிரியர்கள் வரவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. திரையரங்குகளை தூய்மையாக பராமரித்திடவும், மாணவ–மாணவிகளுக்கு தேவையான குடிநீர் வசதி, மின்விசிறி வசதி, சுகாதாரமான கழிவறை வசதிகளுக்கு ஏற்பாடு செய்திடவும், குழந்தைகள் திரைப்பட விழா நடைபெறும் சமயம் திரையரங்க பணியாளர்களை பணியில் அமர்த்தி குழந்தைகளுக்கு பாதுகாப்பு வழங்கிடவும் திரையரங்கத்தினருக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு கலெக்டர் பேசினார்.

முன்னதாக தியேட்டரில் பள்ளி மாணவ–மாணவிகளுடன் கலெக்டர் ரோகிணி மற்றும் அதிகாரிகள் பலரும் அமர்ந்து குழந்தைகள் திரைப்படத்தை பார்த்தனர்.

இந்த நிகழ்ச்சியில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கணேஷ்மூர்த்தி, இந்திய குழந்தைகள் திரைப்பட சங்க உதவி வினியோக அலுவலர் அகிலா, சேலம் (மேற்கு) தாசில்தார் தீபசித்ரா உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story