நாடாளுமன்ற தேர்தலையொட்டி 135 வாக்குச்சாவடிகளின் பெயர் மாற்றம் கலெக்டர் தகவல்


நாடாளுமன்ற தேர்தலையொட்டி 135 வாக்குச்சாவடிகளின் பெயர் மாற்றம் கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 21 Feb 2019 4:00 AM IST (Updated: 21 Feb 2019 2:03 AM IST)
t-max-icont-min-icon

நாடாளுமன்ற தேர்தலையொட்டி 135 வாக்குச்சாவடிகளின் பெயர் மாற்றம் செய்யப்படும் என்று மாவட்ட கலெக்டர் ரோகிணி தெரிவித்துள்ளார்.

சேலம், 

நாடாளுமன்ற தேர்தலையொட்டி அனைத்து அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் சேலம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. மாவட்ட கலெக்டரும், மாவட்ட தேர்தல் அலுவலருமான ரோகிணி தலைமை தாங்கினார். இதில் அ.தி.மு.க., தி.மு.க., தே.மு.தி.க., பா.ஜனதா உள்பட பல்வேறு அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் கலெக்டர் ரோகிணி பேசியதாவது:–

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கான பணிகள் நடைபெற்று வருகிறது. 1,400 வாக்காளர்களுக்கு அதிகமாக உள்ள வாக்குச்சாவடியில் ஆண் வாக்காளர், பெண் வாக்காளர் என பிரித்து துணை வாக்குச்சாவடிகள் அமைக்கப்படுகிறது. வாக்குச்சாவடி அமைவிடம் மாறுதல் ஏதேனும் இருப்பின் அது குறித்து முன்மொழிவுகள் மற்றும் வாக்குச்சாவடி பெயர் மாற்றம் ஆகியவை குறித்த முன்மொழிவுகள் அனுப்ப அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதன்பேரில் கெங்கவல்லி சட்டமன்ற தொகுதியில் 2 வாக்குச்சாவடிகள் அமைவிடம் மாற்றமும், 5 வாக்குச்சாவடிகள் பெயர் மாற்றமும் செய்யப்படுகிறது. ஆத்தூர் சட்டமன்ற தொகுதியில் 2 துணை வாக்குச்சாவடிகள் அமைத்தல், 7 வாக்குச்சாவடிகள் அமைவிடம் மாற்றமும், ஏற்காடு சட்டமன்ற தொகுதியில் 3 வாக்குச்சாவடிகள் அமைவிடம் மாற்றமும், ஓமலூர் சட்டமன்ற தொகுதியில் 1 வாக்குச்சாவடி அமைவிடம் மாற்றமும், 67 வாக்குச்சாவடிகள் பெயர் மாற்றமும், மேட்டூர் சட்டமன்ற தொகுதியில் 3 துணை வாக்குச்சாவடிகள் அமைத்தல், எடப்பாடி சட்டமன்ற தொகுதியில் 21 வாக்குச்சாவடிகள் பெயர் மாற்றமும் செய்யப்படுகிறது.

சங்ககிரி சட்டமன்ற தொகுதியில் 6 வாக்குச்சாவடிகள் அமைவிடம் மாற்றம், சேலம் மேற்கு சட்டமன்ற தொகுதியில் 6 துணை வாக்குச்சாவடிகள் அமைத்தல், 4 வாக்குச்சாவடிகள் அமைவிடம் மாற்றமும், 15 வாக்குச்சாவடிகள் பெயர் மாற்றமும், சேலம் வடக்கு சட்டமன்ற தொகுதியில் 1 வாக்குச்சாவடி அமைவிடம் மாற்றமும், 2 வாக்குச்சாவடிகள் பெயர் மாற்றமும், சேலம் தெற்கு சட்டமன்ற தொகுதியில் 15 வாக்குச்சாவடிகள் பெயர் மாற்றம் செய்யப்படுகிறது.

வீரபாண்டி சட்டமன்ற தொகுதியில் 10 வாக்குச்சாவடிகள் பெயர் மாற்றமும் என மொத்தம் 11 துணை வாக்குச்சாவடிகள் அமைத்தல், 24 வாக்குச்சாவடிகள் அமைவிடம் மாற்றம் மற்றும் 135 வாக்குச்சாவடிகளின் பெயர் மாற்றம் என்ற எண்ணிக்கையில் முதன்மை தேர்தல் அலுவலர் மற்றும் அரசு செயலருக்கு முன்மொழிவு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு கலெக்டர் ரோகிணி பேசினார்.

முன்னதாக மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் நாடாளுமன்ற தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் வாக்காளர் தாம் அளித்த வாக்கினை உறுதி செய்யும் எந்திரத்தில் எவ்வாறு வாக்குப்பதிவு செய்வது என்பது குறித்த விழிப்புணர்வு முகாமினை அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் கலெக்டர் ரோகிணி தொடங்கி வைத்தார்.

இந்த கூட்டத்தில் மாநகராட்சி ஆணையாளர் சதிஷ், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) ரவிச்சந்திரன், சேலம் உதவி கலெக்டர் செழியன் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

முடிவில், கலெக்டர் ரோகிணி நிருபர்களிடம் கூறுகையில், வருகிற 23, 24–ந் தேதி அனைத்து வாக்குச்சாவடிகளில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல் முகாம் நடக்கிறது. இதில் இளம் வாக்காளர்கள் தங்களது பெயர்களை பதிவு செய்து கொள்ளலாம். இதற்கான விண்ணப்பங்கள் அந்தந்த வாக்குச்சாவடிகளில் உள்ளன. அதனை பூர்த்தி செய்து அங்கேயே கொடுக்கலாம், என்றார்.


Next Story