அ.தி.மு.க.–பா.ஜ.க. கூட்டணியால் எதிர்க்கட்சியினர் அதிர்ச்சி பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி


அ.தி.மு.க.–பா.ஜ.க. கூட்டணியால் எதிர்க்கட்சியினர் அதிர்ச்சி பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி
x
தினத்தந்தி 20 Feb 2019 11:15 PM GMT (Updated: 20 Feb 2019 5:07 PM GMT)

அ.தி.மு.க.–பா.ஜ.க. கூட்டணியால் எதிர்க்கட்சியினர் அதிர்ச்சி அடைந்து உள்ளனர் என்று மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.

கும்பகோணம்,

பயங்கரவாதிகள் தாக்குதல் பல இடங்களில், பல முறைகளில் நடந்துள்ளது. ஆனால் தன்னுடைய பகுதியில் நடைபெற்ற மதமாற்ற செயல்பாடுகளை தட்டிக்கேட்டதால் ராமலிங்கம் கொலை செய்யப்பட்டுள்ளார். இது கொடுமையானது. எல்லா மதத்தினருக்கும் அவரவர் மதத்திற்கான முழு உரிமை கட்டாயம் உண்டு. ராமலிங்கம் பா.ஜனதாவையோ, வேறு எந்த இயக்கத்தையோ சேர்ந்தவர் இல்லை.

தன் பகுதியில் இருக்கக்கூடிய மக்கள் எந்த காரணத்தாலும் தவறாக வழிநடத்தப்படக்கூடாது என தடுத்த ஒரே காரணத்தால் படுகொலை செய்யப்பட்டுள்ளார். எனவே தமிழக அரசு குற்றவாளிகள் மீது எந்தவித பாகுபாடும் இல்லாமல் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும். கொலை செய்யப்பட்ட ராமலிங்கம் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்குவதுடன், அவர்களுக்கு உரிய பாதுகாப்பையும், நிவாரண தொகையையும் வழங்க வேண்டும்.


நடைபெற உள்ள பாராளுமன்ற தொகுதியில் பா.ஜனதா கூட்டணி கட்சியினர் எந்த தொகுதியில், எந்த சின்னத்தில் போட்டியிட்டாலும் பா.ஜனதா கூட்டணிதான் வெற்றி பெறும். எங்கள் கூட்டணியில் எந்தெந்த கட்சிகள் சேர்ந்துள்ளதோ அத்தனை கட்சிகளுக்கும் இது சாதகமான கூட்டணியாக இருக்கும். மொத்தத்தில் இது தமிழ்நாட்டிற்கும், இந்தியாவிற்கும் சாதகமான கூட்டணியாக இருக்கும்.

அ.தி.மு.க. பா.ஜ.க. அமைத்துள்ள வலுவான கூட்டணியை பார்த்து எதிர்க்கட்சியினர் அதிர்ச்சியில் உறைந்து போய் உள்ளனர்.


பிரதமர் மோடி கடந்த 5 ஆண்டுகளில் அனைத்து துறைகளிலும் சாதனை படைத்துள்ளார். நடைபெற உள்ள தேர்தலில், பிரதமர் மோடி படைத்துள்ள சாதனைகளை முன்னிலைப்படுத்தி பிரசாரம் செய்யப்படும். ஜி.எஸ்.டி. வரியால் பாதிப்பு என்பது கிடையாது. அதனால் ஏற்பட்ட நன்மைகள்தான் அதிகம். ஆனால் எல்லோரும் அதை திரித்து கூறுகிறார்கள்.

இந்த தேர்தலில் மற்றவர்களுடைய கருத்துகள் பேசப்போவது இல்லை. யார் ஆட்சி தொடர வேண்டும், யார் இந்தியாவை ஆள வேண்டும் என்பதுதான் முக்கியமான விசயமாக இருக்கப்போகிறது. ஒட்டுமொத்த தமிழகமும், இந்தியாவும் நரேந்திர மோடியின் ஆட்சிதான் வரவேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story