தேர்தல் கண்காணிப்பு, பறக்கும் படைகளுக்கு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்பட 144 போலீசார் தயார்


தேர்தல் கண்காணிப்பு, பறக்கும் படைகளுக்கு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்பட 144 போலீசார் தயார்
x
தினத்தந்தி 20 Feb 2019 10:45 PM GMT (Updated: 20 Feb 2019 6:04 PM GMT)

நாடாளுமன்ற தேர்தலுக்கான கண்காணிப்பு, பறக்கும் படைகளில் நியமிக்க தயாராக சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்பட 144 போலீசார் ஒதுக்கப்பட்டுள்ளனர்.

திண்டுக்கல், 

நாடாளுமன்ற தேர்தல் தேதி அடுத்த மாதம் முதல் வாரத்தில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதையொட்டி தேர்தல் முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. பொதுத்தேர்தல் என்றாலே வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் கொடுப்பதை தடுக்க அதிகாரிகள் பெரும் சிரமப்படுவார்கள். இதற்காக தேர்தல் கண்காணிப்பு படை, பறக்கும் படை ஆகியவை அமைக்கப்படுவது வழக்கம்.

அதன்படி நாடாளுமன்ற தேர்தலிலும் பறக்கும் படைகள் அமைக்கப்படுகிறது. இதில் திண்டுக்கல் மாவட்டத்தில் திண்டுக்கல், ஆத்தூர், பழனி, ஒட்டன்சத்திரம், நத்தம், நிலக்கோட்டை, வேடசந்தூர், கொடைக்கானல் ஆகிய 8 பகுதிகளுக்கு தலா ஒரு பறக்கும் படை, கண்காணிப்பு படை அமைக்கப்பட உள்ளது. இதில் ஒவ்வொன்றுக்கும் தலா 3 சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள், 6 போலீஸ்காரர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.

இவர்களில் ஒரு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் 2 போலீஸ்காரர்கள், வருவாய்த்துறை அதிகாரிகளுடன் இணைந்து 8 மணி நேரம் பணியாற்ற வேண்டும். அவ்வாறு சுழற்சி முறையில் 24 மணி நேரமும் பணியாற்றுவார்கள். நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும், பறக்கும் படைகள் மற்றும் கண்காணிப்பு படைகள் அமைக்கப்படும்.

இதையொட்டி முன்கூட்டியே அந்த 16 படைகளுக்கு போலீசார் தயாராக வைக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில் 48 சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் 96 போலீசார் தேர்தல் படைகளுக்கு ஒதுக்கப்பட்டு உள்ளனர். இவர்கள் அனைவரும் பறக் கும் படை, கண்காணிப்பு படையில் இணைந்து பணியாற்றுவார்கள். இதையொட்டி நேற்று அனைவரும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு வந்து பெயர் களை பதிவு செய்தனர். 

Next Story