தேன்கனிக்கோட்டை அருகே பரபரப்பு தடையை மீறி எருதுவிடும் விழா; தடியடி-வாகனங்கள் மீது கல்வீச்சு


தேன்கனிக்கோட்டை அருகே பரபரப்பு தடையை மீறி எருதுவிடும் விழா; தடியடி-வாகனங்கள் மீது கல்வீச்சு
x
தினத்தந்தி 21 Feb 2019 4:45 AM IST (Updated: 21 Feb 2019 12:09 AM IST)
t-max-icont-min-icon

தேன்கனிக்கோட்டை அருகே தடையை மீறி நடைபெற்ற எருதுவிடும் விழாவில் போலீசார் தடியடி நடத்தினர். இதனால் போலீஸ், தீயணைப்பு வாகனங்கள் மீது பொதுமக்கள் கல்வீசி தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

தேன்கனிக்கோட்டை,

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ளது மதகொண்டப்பள்ளி கிராமம். இந்த கிராமத்தில் பிரசன்ன லட்சுமி வெங்கடேஸ்வர சாமி கோவில் உள்ளது. இந்த கோவில் தேர்த்திருவிழா நேற்று முன்தினம் நடைபெற்றது.

இதைத்தொடர்ந்து நேற்று எருதுவிடும் விழா நடத்த மாவட்ட நிர்வாகத்திடம் பொதுமக்கள் அனுமதி கேட்டிருந்தனர். ஆனால் சட்டம், ஒழுங்கு பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு காரணங்களை முன்வைத்து எருதுவிடும் விழா நடத்த மாவட்ட நிர்வாகம் அனுமதி மறுத்திருந்தது.

இந்த நிலையில் நேற்று மதகொண்டப்பள்ளியில் தடையை மீறி எருதுவிடும் விழா நடைபெற்றது. இதில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட காளைகள் அலங்கரித்து கொண்டு வரப்பட்டு மைதானத்தில் அவிழ்த்து விடப்பட்டு எருதுவிடும் விழா நடைபெற்றது.

இந்த விழாவை காண ஓசூர், தேன்கனிக்கோட்டை, தளி மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் திரண்டு வந்திருந்தனர். தீயணைப்பு வாகனமும் அங்கு நிறுத்தப்பட்டிருந்தது. தடையை மீறி எருதுவிடும் விழா நடைபெறுவது குறித்து தகவல் அறிந்த தளி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் அவர்கள் விழா குழுவினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது தடையை மீறி விழா நடத்த கூடாது எனவும், உடனடியாக எருது விடும் விழாவை நிறுத்துமாறும் போலீசார் கூறினர். ஆனால் அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் சிலர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் போலீசாருக்கும், பொதுமக்களுக்கும் இடையே வாக்குவாதம், தள்ளுமுள்ளு ஏற்பட்டது. மேலும், அங்கிருந்த போலீஸ் வாகனங்கள், தீயணைப்பு வாகனங்கள் மீது பொதுமக்கள் சிலர் கற்களை வீசி தாக்கினர். இதில், அந்த வாகனங்களின் கண்ணாடிகள் சுக்கு நூறாக உடைந்தன.

இதன் காரணமாக போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைக்க முயன்றனர். இதனால் மேலும் ஆத்திரமடைந்த பொதுமக்கள் போலீசார் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இதில், தீயணைப்பு வீரர் பேட்டையன், தீயணைப்பு வாகன டிரைவர் சந்திரசேகர் மற்றும் 6 போலீசார் காயம் அடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

இதைத்தொடர்ந்து நீண்ட நேர போராட்டத்திற்கு பின்னர் போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். இந்த சம்பவத்தால் விழா நடைபெற்ற மைதானத்தில் கற்களும், கம்புகளும், பொதுமக்களின் காலணிகளும் ஆங்காங்கே சிதறி கிடந்தன. இதனால் அப்பகுதியே போர்க்களம் போல காட்சியளித்தது.

இதற்கிடையே கலவரத்திற்கு காரணமானதாக கூறி அப்பகுதியை சேர்ந்த 25 பேரை போலீசார் விசாரணைக்காக போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். தொடர்ந்து அங்கு பதற்றம் நிலவுவதால் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் காரணமாக அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story