நாகையில் 3-வது நாளாக பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் வேலை நிறுத்தம் சேவை பாதிப்பால் பொதுமக்கள் அவதி


நாகையில் 3-வது நாளாக பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் வேலை நிறுத்தம் சேவை பாதிப்பால் பொதுமக்கள் அவதி
x
தினத்தந்தி 21 Feb 2019 4:30 AM IST (Updated: 21 Feb 2019 12:28 AM IST)
t-max-icont-min-icon

நாகையில் 3-வது நாளாக பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். தொலை தொடர்பு சேவை பாதிப்பால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

நாகப்பட்டினம்,

பொதுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல். நிறுவனத்தை தனியாரிடம் தாரைவார்க்கும் முயற்சியை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பி.எஸ்.என்.எல். அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் தமிழகம் முழுவதும் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன்படி நாகை பழைய பஸ் நிலையம் அருகே உள்ள பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன்பு தமிழ்நாடு தொலை தொடர்பு ஒப்பந்த தொழிலாளர் சங்கத்தினர் நேற்று 3-வது நாளாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு கிளை தலைவர்கள் ஜெயராமன், திருஞானசம்பந்தம் தலைமை தாங்கினார். செயலாளர் கணேசன், சண்முகம், இளம் வழுதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

4ஜி சேவையை பி.எஸ்.என்.எல். நிறுவனத்திற்கு வழங்க வேண்டும். பொதுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல். நிறுவனத்தை தனியாரிடம் தாரைவார்க்கும் முயற்சியை கைவிட வேண்டும். ஓய்வூதியதாரருக்கு ஓய்வூதிய மாற்றத்தை அமல்படுத்த வேண்டும். அரசு விதிகளின் படி மட்டுமே பி.எஸ்.என்.எல். நிறுவனத்திடம் இருந்து ஓய்வூதிய பங்களிப்பை பெற வேண்டும்.

சம்பள பாக்கியை உடனே வழங்கவும், 10 வருடம் பணி முடித்தவர்களை பணி நிரந்தரம் செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோஷங்கள் எழுப்பினர். போராட்டத்தில் தொலை தொடர்பு ஒப்பந்த தொழிலாளர் சங்கத்தை சேர்ந்த ரகுமான், ராஜசேகர், சீனிவாசன், மதியழகன், விநாயகமூர்த்தி, விஜயஆரோக்கியராஜ் உள்பட 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

வேலை நிறுத்த போராட்டம் காரணமாக அலுவலகங்கள், வணிக வளாகங்கள், வங்கிகள் ஆகியவற்றில் பி.எஸ்.என்.எல். தொலை தொடர்பு சேவை பாதிக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

Next Story