தண்டையார்பேட்டையில் தாயை கத்தியால் வெட்டி 11 பவுன் நகை பறிப்பு ஐகோர்ட்டு வக்கீலுக்கு வலைவீச்சு


தண்டையார்பேட்டையில் தாயை கத்தியால் வெட்டி 11 பவுன் நகை பறிப்பு ஐகோர்ட்டு வக்கீலுக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 21 Feb 2019 3:45 AM IST (Updated: 21 Feb 2019 1:17 AM IST)
t-max-icont-min-icon

பெற்ற தாயை கத்தியால் வெட்டி 11 பவுன் நகையை பறித்து சென்ற சென்னை ஐகோர்ட்டு வக்கீலை போலீசார் தேடி வருகின்றனர்.

பெரம்பூர்,

சென்னை தண்டையார்பேட்டை கே.ஜி.கார்டன் 4-வது தெருவைச் சேர்ந்தவர் சோமசுந்தரம். இவருடைய மனைவி பங்கஜம்மாள் (வயது 59). இவர்களுடைய ஒரே மகன் மாரிமுத்து (31). இவர், சென்னை ஐகோர்ட்டில் வக்கீலாக உள்ளார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.

மாரிமுத்து தனது தாயாரிடம் ரூ.5 லட்சம் கேட்டு அடிக்கடி தொந்தரவு செய்து வந்ததாக தெரிகிறது. வழக்கம்போல் நேற்று முன்தினம் இரவு தனது தாய் பங்கஜம்மாளிடம் பணம் கேட்டார். ஆனால் அவர் பணம் கொடுக்க மறுத்ததால் தகராறில் ஈடுபட்டார்.

கத்தியால் வெட்டினார்

இதில் ஆத்திரமடைந்த மாரிமுத்து, வீட்டில் இருந்த கத்தியால் பெற்ற தாய் என்றும் பாராமல் பங்கஜம்மாளின் இடது கையில் வெட்டிவிட்டு, அவர் கழுத்தில் அணிந்து இருந்த 11 பவுன் சங்கிலியை பறித்துவிட்டு தப்பி ஓடிவிட்டார்.

கையில் வெட்டு பட்ட பங்கஜம்மாள், வலியால் அலறி துடித்தார். சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர்.

இதுபற்றி பங்கஜம்மாள் அளித்த புகாரின்பேரில் தண்டையார்பேட்டை போலீசார் தலைமறைவான அவரது மகன் மாரிமுத்துவை தேடி வருகின்றனர்.

Next Story