குடும்ப தகராறில் வாலிபர் அடித்து கொலை தொழிலாளிக்கு ஆயுள்தண்டனை ஆரணி கோர்ட்டு தீர்ப்பு
குடும்பத் தகராறில் வாலிபரை அடித்து கொலை செய்த வழக்கில் தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து ஆரணி கூடுதல் மாவட்ட அமர்வு கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
ஆரணி,
வந்தவாசி தாலுகா சொரப்புத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் மதியழகன் (வயது 48), தொழிலாளி. இவருடைய மனைவி சாந்திக்கும் (42)வேறொரு நபருக்கும் தகாத உறவு உள்ளது என்று மதியழகன் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த 2011-ம் ஆண்டு நவம்பர் 26-ந் தேதி சாந்தியின் சகோதரர்கள் பழனி, கங்காதுரையிடம் (28) ‘உங்கள் சகோதரி வேறொரு நபருடன் தகாத உறவில் உள்ளதை குடும்பத்தினர் யாரும் தட்டிக்கேட்பதில்லை. அதேபோன்று என்னிடம் சண்டை போட்டு அவள் உங்கள் வீட்டுக்கு வந்தால் எப்படி சேர்த்து கொள்ளலாம்’ என்று மதியழகன் வாக்குவாதத்தில் ஈடு பட்டுள்ளார்.
இந்த வாக்குவாதம் முற்றியதில் அவர்களுக்கு இடையே கைகலப்பு ஏற்பட்டுள்ளது. இதில், ஆத்திரம் அடைந்த மதியழகன் அப்பகுதியில் கிடந்த இரும்பு ராடால் கங்காதுரையை சரமாரியாக தாக்கினார். இதில், அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பலியானார். இது குறித்து பழனி, பொன்னூர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மதியழகனை கைது செய்து வேலூர் மத்திய ஜெயிலில் அடைத்தனர்.
இந்த வழக்கு விசாரணை ஆரணி கூடுதல் மாவட்ட அமர்வு கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த வழக்கை நீதிபதி எஸ்.தேவநாதன் விசாரித்து நேற்று தீர்ப்பு வழங்கினார். அதில், குடும்ப தகராறில் கங்காதுரையை அடித்து கொலை செய்த மதியழகனுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.
இதையடுத்து பலத்த காவலுடன் மதியழகன் அழைத்து செல்லப்பட்டு வேலூர் மத்திய ஜெயிலில் அடைக்கப்பட்டார்.
Related Tags :
Next Story