கோடநாடு வழக்கில் பிடிவாரண்டு ஊட்டி கோர்ட்டில் மனோஜ்சாமி சரண்
கோடநாடு வழக்கில் பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்ட மனோஜ்சாமி ஊட்டி கோர்ட்டில் சரண் அடைந்தார்.
ஊட்டி,
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள கோடநாடு எஸ்டேட்டில் கடந்த 24.4.2017-ந் தேதி காவலாளி ஓம்பிரகாஷ் கொலை செய்யப்பட்டார். மேலும் எஸ்டேட் பங்களாவில் இருந்த பொருட்கள் கொள்ளை அடிக்கப்பட்டன. இதுகுறித்து கோத்தகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து ஷயான், மனோஜ், மனோஜ்சாமி, திபு, ஜித்தின்ராய், உதயகுமார், சந்தோஷ்சாமி, சதீசன், சம்சீர் அலி, பிஜின் ஆகிய 10 பேரை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை ஊட்டி கோர்ட்டில் நடைபெற்று வருகிறது.
கடந்த 8-ந் தேதி ஊட்டி கோர்ட்டில் கோடநாடு வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது விசாரணைக்கு ஆஜராகாத ஷயான், மனோஜ், திபு, பிஜின் ஆகிய 4 பேருக்கு பிடிவாரண்டு பிறப்பித்தும், ஷயான், மனோஜ் ஆகியோருக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்தும் நீதிபதி உத்தரவிட்டார். பின்னர் கடந்த 10-ந் தேதி கேரளாவில் திபு, பிஜின் ஆகிய இருவரை தனிப்படை போலீசார் கைது செய்து ஊட்டி கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.
கடந்த 18-ந் தேதி கோடநாடு வழக்கு ஊட்டி கோர்ட்டில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது கோவை மத்திய சிறையில் உள்ள திபு, பிஜின் மற்றும் சம்சீர் அலி, சதீசன், உதயகுமார், சந்தோஷ்சாமி, ஜித்தின்ராய் ஆகிய 7 பேர் ஆஜரானார்கள். மனோஜ்சாமி ஆஜராகவில்லை. கோர்ட்டில் ஆஜராகாத மனோஜ்சாமிக்கு பிடிவாரண்டு பிறப்பித்து நீதிபதி வடமலை உத்தரவிட்டார். இந்த நிலையில் நேற்று ஊட்டி கோர்ட்டில் மாவட்ட நீதிபதி வடமலை முன்பு மனோஜ்சாமி சரண் அடைந்தார்.
அப்போது மனோஜ்சாமியின் தாயாருக்கு திதி கொடுக்கும் சடங்கு இருந்ததால், வழக்கு விசாரணைக்கு ஆஜராக முடியவில்லை. பிடிவாரண்டு அடிப்படையில் போலீசார் கைது செய்யாமல் மனோஜ்சாமி தானாக கோர்ட்டில் சரண் அடைந்து உள்ளார். எனவே அவருக்கு பிறப்பிக்கப்பட்ட பிடிவாரண்டை திரும்ப பெற வேண்டும் என்று வக்கீல் சிவக்குமார் மனுத்தாக்கல் செய்தார்.
இதனை எதிர்த்த அரசு கூடுதல் வக்கீல் சுதாகர் வழக்கு விசாரணைக்கு மனோஜ்சாமி ஆஜராவது இல்லை. வழக்கை காலம் கடத்துகிறார். அவரை ஜாமீனில் விட்டால் வழக்கில் சம்பந்தப்பட்ட சாட்சிகளை களைக்கக்கூடும். மேலும் தலைமறைவாக வாய்ப்பும் உள்ளது. ஆகவே பிடிவாரண்டை திரும்ப பெறக்கூடாது என்று வாதிட்டார். இதையடுத்து பிடிவாரண்டை திரும்ப பெற கோரும் மனுவை தள்ளுபடி செய்ததுடன், மனோஜ்சாமியை சிறையில் அடைக்க நீதிபதி வடமலை உத்தரவிட்டார்.
Related Tags :
Next Story