விளாத்திகுளம் அருகே டாஸ்மாக் கடையின் ஷட்டரில் துளையிட்டு 363 மதுபாட்டில்கள் திருட்டு


விளாத்திகுளம் அருகே டாஸ்மாக் கடையின் ஷட்டரில் துளையிட்டு 363 மதுபாட்டில்கள் திருட்டு
x
தினத்தந்தி 20 Feb 2019 10:00 PM GMT (Updated: 20 Feb 2019 8:14 PM GMT)

விளாத்திகுளம் அருகே டாஸ்மாக் கடையின் ஷட்டரில் துளையிட்டு 363 மதுபாட்டில்களை திருடிச் சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

விளாத்திகுளம், 

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள குளத்தூர் கிழக்கு கடற்கரை சாலையோரம் மயானத்தின் அருகில் டாஸ்மாக் கடை உள்ளது. இங்கு மேற்பார்வையாளராக தூத்துக்குடி மில்லர்புரத்தைச் சேர்ந்த இசக்கி பணியாற்றி வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவில் வழக்கம்போல் டாஸ்மாக் கடையை பூட்டிச் சென்றார். பின்னர் நள்ளிரவில் அங்கு வந்த மர்மநபர்கள், டாஸ்மாக் கடையின் முன்பிருந்த கண்காணிப்பு கேமராவை உடைத்து சேதப்படுத்தினர்.

பின்னர் அவர்கள், டாஸ்மாக் கடையின் முன்பக்க இரும்பு ஷட்டரின் நடுவில் வெல்டிங் எந்திரம் மூலம் துண்டித்து துளையிட்டனர். பின்னர் அதன் வழியாக டாஸ்மாக் கடைக்குள் புகுந்த மர்மநபர்கள், அங்கிருந்த 363 மதுபாட்டில்களை திருடினர். இவற்றின் மதிப்பு சுமார் ரூ.85 ஆயிரம் ஆகும். மேலும் டாஸ்மாக் கடையில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகும் காட்சிகளை சேமிக்கும் ‘ஹார்டு டிஸ்கை’யும் மர்மநபர்கள் எடுத்து சென்றனர்.

நேற்று காலையில் அந்த வழியாக சென்றவர்கள், டாஸ்மாக் கடையின் ஷட்டரில் துளையிடப்பட்டதை அறிந்து அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து அவர்கள் உடனடியாக குளத்தூர் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். உடனே போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமலட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர் வள்ளிநாயகம் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர் கலாவதி, திருட்டு நடந்த டாஸ்மாக் கடையில் பதிவான தடயங்களை பதிவு செய்தார்.

போலீஸ் மோப்ப நாய் சோனோ வரவழைக்கப்பட்டது. அது டாஸ்மாக் கடையில் மோப்பம் பிடித்து விட்டு, டாஸ்மாக் கடையின் பின்புறம் உள்ள காட்டு பகுதி வழியாக சிறிது தூரம் ஓடியது. ஆனாலும் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, டாஸ்மாக் கடையின் ஷட்டரில் துளையிட்டு மதுபாட்டில்களை திருடிச் சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story