முத்தணம்பாளையம் பகுதியில் குடிநீர் வழங்கக்கோரி பெண்கள் சாலைமறியல்
திருப்பூர் முத்தணம்பாளையம் பகுதியில் குடிநீர் வழங்கக்கோரி பெண்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பேச்சுவார்த்தை நடத்த வந்த அதிகாரிகளுடன் அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
நல்லூர்,
திருப்பூர் மாநகராட்சி 3–வது மண்டலத்திற்குட்பட்ட முத்தணம்பாளையம், பி.ஏ.பி.நகர், குருவாயூரப்பன் நகர், கார்த்திக் நகர், உள்ளிட்ட பகுதிகளில் குடிநீர் பற்றாக்குறை உள்ளது. இது குறித்து பொதுமக்கள் அதிகாரிகளிடம் தெரிவித்தும் பயனில்லாததால் ஆத்திரமடைந்த அப்பகுதி பெண்கள் நேற்று முத்தணம்பாளையம், வாய்க்கால்மேடு, நால்ரோட்டில் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து சாலைமறியலில் ஈடுபட்ட பெண்கள் கூறியதாவது:–
முத்தணம்பாளையம் அதிக எண்ணிக்கையிலான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். குருவாயூரப்பன் நகர், பி.ஏ.பி.நகர் முதல் வீதி மற்றும் 2–வது வீதி கார்த்திக் நகர் உள்ளிட்ட பகுதிகளில் தெருவிளக்கு, தார்ச்சாலை உள்ளிட்ட அடிப்படை வசதி இதுவரை மாநகராட்சி செய்து தரவில்லை எனவும், அடிப்படை தேவையான குடிநீர் 14 நாட்களுக்கு ஒரு முறை 1 மணிநேரம் அதுவும் குறைந்த அளவு குடிநீர் மட்டுமே வருகிறது.
இதுகுறித்து வீதிகளுக்கு குடிநீர் திறப்பாளரிடமும், குழாய் ஆய்வாளர், மற்றும் அதிகாரிகளுக்கும் மனு அளித்தும் எந்த பயனும் இல்லை. மேலும் குடிநீர்வரி செலுத்தாமல் விட்டால் முறையாக அறிவிக்காமல் குழாய் இணைப்பை துண்டிக்கின்றனர். ஆனால் குடிநீர் கேட்டால் யாரும் கண்டுகொள்வதில்லை.
எனவே எங்கள் பகுதிக்கு 5 நாட்களுக்கு ஒரு முறை 2 மணிநேரம் பகலில் குடிநீர் வழங்க வேண்டும் எனவும், தெருவிளக்கு இல்லாமல் இருட்டில் பெண்கள் அச்சத்துடன் செல்ல வேண்டிய நிலை உள்ளது. இருட்டாக உள்ளதால் வழிப்பறி அதிகரித்து வருகிறது. எனவே தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மாநகராட்சி அதிகாரிகள் செய்து தர வேண்டும் என சாலைமறியலில் ஈடுபட்டோம்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
சாலைமறியல் குறித்து தகவல் அறிந்த மாநகராட்சி செயற்பொறியாளர் கனகராஜ், குழாய் ஆய்வாளர் சண்முகவடிவேல் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்களிடம், பெண்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்த ஊரக போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் செல்லத்துரை உள்ளிட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது 6 நாட்களுக்கு ஒரு முறை 1½ மணி நேரம் குடிநீர் திறந்து விடுவதாக போலீசார் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் உறுதியளித்த பின்னர் அங்கிருந்து பெண்கள் கலைந்துசென்றனர். இதனால் அரை மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.