திருப்பூரில் பேக்கரி, தள்ளுவண்டி கடைகளில் இருந்து தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் பறிமுதல்
திருப்பூரில் பேக்கரிகள், தள்ளுவண்டி கடைகளில் இருந்து தடைச்செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
திருப்பூர்,
தமிழகம் முழுவதும் பிளாஸ்டிக் பைகள் பயன்பாட்டுக்கு அரசு தடை விதித்துள்ளது. இதையடுத்து பிளாஸ்டிக் விற்பனை செய்யும் மொத்த மற்றும் சில்லரை விற்பனை கடைகள் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அந்த வகையில் திருப்பூருக்குட்பட்ட பகுதிகளில் பிளாஸ்டிக் பைகள், பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளில் ஆய்வு மேற்கொண்டு, தடை செய்யப்பட்ட பொருட்கள் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்தால் அவற்றை பறிமுதல் செய்வதுடன், சம்பந்தப்பட்டவர்கள் மீதும் போலீசார் நடவடிக்கை எடுத்தும் வருகின்றனர்.
இந்த நிலையில் திருப்பூர் காலேஜ் ரோடு பகுதிகளில் உள்ள கடைகளில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்படுவதாகவும், விற்பனை செய்யப்படுவதாகவும் தகவல்கள் கிடைத்தன. இதையடுத்து மாநகராட்சி நகர்நல அதிகாரி பூபதி தலைமையில் சுகாதார அதிகாரி முருகன், சுகாதார ஆய்வாளர் ராமகிருஷ்ணன் ஆகியோர் கொண்ட குழு நேற்று அந்த பகுதியில் உள்ள உணவகங்கள், பெட்டிக்கடைகள், தள்ளுவண்டி கடைகளில் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது அந்த கடைகளில் பிளாஸ்டிக் பொருட்கள் மறைத்து வைத்து பயன்படுத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து அங்கு உள்ள பல்வேறு கடைகளில் வைக்கப்பட்டிருந்த சுமார் 50 கிலோவுக்கு அதிகமான பிளாஸ்டிக் பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும், அந்த கடை உரிமையாளர்களுக்கு எச்சரிக்கையும் விடுத்து வந்தனர்.
ஆனால் பெரிய அளவிலான ஓட்டல்கள், பெரிய வணிகவளாகங்களில் தொடர்ச்சியாக தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள், பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு கொண்டிருக்கிறது. ஆனால், சிறிய அளவில் பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்தும் கடைகளை குறி வைத்தே அதிகாரிகள் தொடர்ந்து சோதனை நடத்தி வருகின்றனர் என்று தள்ளுவண்டி மற்றும் பேக்கரி கடை வியாபாரிகள் வேதனையுடன் தெரிவித்தனர்.