செஞ்சி அருகே பரிதாபம், லாரி-மோட்டார் சைக்கிள் மோதல்


செஞ்சி அருகே பரிதாபம், லாரி-மோட்டார் சைக்கிள் மோதல்
x
தினத்தந்தி 21 Feb 2019 4:15 AM IST (Updated: 21 Feb 2019 2:35 AM IST)
t-max-icont-min-icon

செஞ்சி அருகே லாரி-மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் தனியார் நிறுவன ஊழியர்கள் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

செஞ்சி,

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த மோசவாடி கிராமத்தை சேர்ந்தவர் ராதாமணி மகன் ராம்குமார்(வயது 21). இவர் செல்போன் கோபுரங்களை பராமரிக்கும் தனியார் நிறுவனம் ஒன்றில் ஊழியராக பணிபுரிந்து வந்தார். இவர் நேற்று தன்னுடன் பணிபுரியும் வந்தவாசியை சேர்ந்த திருமாறன்(21), வந்தவாசி எறும்பூரை சேர்ந்த அன்பு(26) ஆகியோருடன் வேலை சம்பந்தமாக வந்தவாசியில் இருந்து ஒரு மோட்டார் சைக்கிளில் கடலூருக்கு புறப்பட்டார். மோட்டார் சைக்கிளை ராம்குமார் ஓட்டினார்.

இவர்கள் 3 பேரும் நேற்று காலை செஞ்சி- விழுப்புரம் சாலையில் சென்று கொண்டிருந்தனர். செஞ்சியை அடுத்த கோழிப்பண்ணை என்ற இடத்தில் சென்றபோது, நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் இருந்து உப்பு மூட்டைகளை ஏற்றிக் கொண்டு வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டை நோக்கி வந்த லாரியும், ராம்குமார் ஓட்டிவந்த மோட்டார் சைக்கிளும் எதிர்பாராதவிதமாக நேருக்குநேர் மோதிக் கொண்டன.

இதில் ராம்குமார், திருமாறன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். குப்பன் மகன் அன்பு பலத்த காயத்துடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். இதைபார்த்த அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து அன்புவை மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

இதற்கிடையே விபத்து பற்றி தகவல் அறிந்த கஞ்சனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜீவராஜ் மணிகண்டன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விபத்தில் பலியான 2 பேரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் 30 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story