திருமணத்துக்கு மறுத்ததால், பிளேடால் கையை அறுத்துக்கொண்டு மைனர் பெண் வீட்டில் வாலிபர் தற்கொலை முயற்சி


திருமணத்துக்கு மறுத்ததால், பிளேடால் கையை அறுத்துக்கொண்டு மைனர் பெண் வீட்டில் வாலிபர் தற்கொலை முயற்சி
x
தினத்தந்தி 21 Feb 2019 2:35 AM IST (Updated: 21 Feb 2019 2:35 AM IST)
t-max-icont-min-icon

கோலார் தங்கவயலில் மைனர் பெண் திருமணத்துக்கு மறுத்ததால் அவருடைய வீட்டில் வைத்து வாலிபர், தனது கையை பிளேடால் அறுத்துக்கொண்டு தற்கொலைக்குமுயன்ற சம்பவம் நடந்துள்ளது.

கோலார் தங்கவயல்,

கோலார் தங்கவயல் தாலுகா பேத்தமங்களா அருகே சொர்ணஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சலபதி (வயது 22). கட்டிட தொழிலாளி. இவர் அதேப்பகுதியை ேசர்ந்த 16 வயது மைனர் பெண்ணை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார்.

அந்த மைனர் பெண் பள்ளிக்கு செல்லும்போதும், திரும்பி வரும்போதும் அவரை பின்தொடர்ந்து சென்று சலபதி தொந்தரவு கொடுத்து வந்ததாக தெரிகிறது.

இதனை அறிந்த மைனர் பெண்ணின் தந்தை, சலபதியை கண்டித்துள்ளார். ஆனாலும் அவர் தொடர்ந்து மைனர் பெண்ணை பின்தொடர்ந்து சென்று தன்னை திருமணம் செய்துகொள்ளும்படி தொந்தரவு கொடுத்து வந்துள்ளார்.

தற்கொலை முயற்சி

இந்த நிலையில், நேற்று முன்தினம் மைனர் பெண் மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். இதனை அறிந்த சலபதி, மைனர் பெண்ணின் வீட்டிற்குள் நுழைந்தார். அப்போது அவர், மைனர் பெண்ணிடம் தன்னை திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று வற்புறுத்தி உள்ளார். மேலும் தன்னை திருமணம் செய்யாவிட்டால் தற்கொலை செய்துகொள்வேன் என்றும் சலபதி மைனர் பெண்ணை மிரட்டி உள்ளார். ஆனால் மைனர் பெண் திருமணத்துக்கு மறுத்ததாக தெரிகிறது.

அப்போது திடீரென்று சலபதி, தான் மறைத்து வைத்திருந்த பிளேடை எடுத்து தன்னுடைய கையை அறுத்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்றார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த மைனர் பெண், கூச்சலிட்டப்படி வீட்டில் இருந்து வெளியே ஓடி வந்தார்.

போலீஸ் விசாரணை

அவருடைய கூச்சல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்தனர். அப்போது வீட்டுக்குள் ரத்தவெள்ளத்தில் சலபதி மயங்கி கிடந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள், சலபதியை மீட்டு சிகிச்சைக்காக கோலார் தங்கவயல் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக பெங்களூரு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து பேத்தமங்களா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story