சட்டக்கல்லூரி மாணவர்கள் மக்களின் பிரச்சினைகளை தீர்க்க பாடுபட வேண்டும் நீதிபதி கயல்விழி வேண்டுகோள்


சட்டக்கல்லூரி மாணவர்கள் மக்களின் பிரச்சினைகளை தீர்க்க பாடுபட வேண்டும் நீதிபதி கயல்விழி வேண்டுகோள்
x
தினத்தந்தி 20 Feb 2019 10:45 PM GMT (Updated: 20 Feb 2019 9:29 PM GMT)

சட்டக்கல்லூரி மாணவர்கள் ஏழை மக்களின் பிரச்சினைகளை தீர்க்க பாடுபடவேண்டும் என்று மாவட்ட நீதிபதி கயல்விழி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ராமநாதபுரம்,

ராமநாதபுரம் அரசு சட்டக்கல்லூரியில் சட்ட உதவி மையம் திறப்பு விழா நடைபெற்றது. விழாவுக்கு மாவட்ட நீதிபதி கயல்விழி தலைமை தாங்கி சட்ட உதவி மையத்தை திறந்து வைத்தார். நிகழ்ச்சிக்கு நிரந்தர மக்கள் நீதிமன்ற தலைவர் ராமகிருஷ்ணன், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் சார்பு நீதிபதி ராமலிங்கம், ராமநாதபுரம் வக்கீல் சங்க தலைவர் ரவிச்சந்திர ராமவன்னி, செயலாளர் நம்புநாயகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் சட்டக்கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டனர். விழாவில் மாவட்ட நீதிபதி கயல்விழி பேசியதாவது:– சட்டக்கல்லூரி மாணவர்களுக்கு ராமநாதபுரம் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவில் பயிற்சிகள் அளிக்கப்பட்டன.

அதனை தொடர்ந்து அவர்களுக்கு சட்டக்கல்லூரியிலேயே பொதுமக்களுக்கு சட்ட ஆலோசனைகளில் வக்கீல் குழுவுடன் சேர்ந்து சேவை செய்யும் நோக்கத்தில் தற்போது இந்த சட்ட உதவி மையம் திறக்கப்பட்டுள்ளது.

இதில் சட்டக்கல்லூரி மாணவர்கள் ஏழை மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு மனுக்கள் பெற்று அதை வக்கீல் குழுவினருடன் சேர்ந்து தீர்த்து வைக்க பாடுபடவேண்டும். பொதுமக்களின் நோய்களை தீர்க்க பாடுபடும் மருத்துவர்களைபோல பொதுமக்களின் பிரச்சினைகள் தீரவும், சட்டக்கல்லூரி மாணவர்கள் சமூகநோக்கத்தோடு பாடுபடவேண்டும். இவ்வாறு அவர் கூறினார். முடிவில் ஜெய்னிபிரான்சினா நன்றி கூறினார்.


Next Story