குமரி மாவட்டத்தில் கூடுதலாக 2 தாலுகாக்கள் பிரித்ததற்கு நன்றி அறிவிப்பு விழா தளவாய்சுந்தரம் பங்கேற்பு


குமரி மாவட்டத்தில் கூடுதலாக 2 தாலுகாக்கள் பிரித்ததற்கு நன்றி அறிவிப்பு விழா தளவாய்சுந்தரம் பங்கேற்பு
x
தினத்தந்தி 20 Feb 2019 10:45 PM GMT (Updated: 20 Feb 2019 9:32 PM GMT)

குமரி மாவட்டத்தில் கூடுதலாக 2 தாலுகாக்கள் பிரித்ததற்காக நடைபெற்ற நன்றி அறிவிப்பு விழாவில் தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய்சுந்தரம் கலந்து கொண்டார்.

நாகர்கோவில்,

குமரி மாவட்டத்தில் அகஸ்தீஸ்வரம், கல்குளம், விளவங்கோடு மற்றும் தோவாளை ஆகிய 4 தாலுகாக்கள் உள்ளன. இந்த நிலையில் கூடுதலாக திருவட்டார் மற்றும் கிள்ளியூர் ஆகிய 2 தாலுகாக்கள் பிரித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.

குமரி மாவட்டத்தில் கூடுதலாக 2 தாலுகாக்களை தொடங்கி வைத்ததற்கு நன்றி அறிவிப்பு விழா நாகர்கோவிலில் ஒரு மண்டபத்தில் நேற்று நடந்தது. குமரி மாவட்ட தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில் நடந்த இந்த விழாவுக்கு மாவட்ட செயலாளர் சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். இணை செயலாளர் சேகர் வரவேற்றார். தலைவர் கோலப்பன் முன்னிலை வகித்தார். கலெக்டர் பிரசாந்த் வடநேரே, பால்வள தலைவர் எஸ்.ஏ.அசோகன், அரசு ரப்பர் வளர்ப்போர் கூட்டுறவு விற்பனை சங்க தலைவர் ஜாண்தங்கம், சங்க மாநில செயலாளர் மூர்த்தி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

விழாவில் தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய்சுந்தரம் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசினார். அப்போது, “வருவாய்த்துறை மிகவும் கஷ்டமான துறை. புயல், மழை மற்றும் வறட்சி உள்ளிட்ட எது வந்தாலும் வருவாய்த்துறை ஊழியர்கள் தான் கூடுதல் பணி செய்ய வேண்டும். தொழில் நுட்பங்களுக்கு ஏற்ப வருவாய்த்துறை வளர்ச்சி அடைந்து வருகிறது. குமரி மாவட்டத்தில் கூடுதலாக 2 தாலுகாக்கள் பிரிக்க கடும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அதற்கு பலன் கிடைத்துள்ளது. பீகார், உத்தர பிரதேசம், மராட்டியம் உள்ளிட்ட மாநிலங்களை ஒப்பிடுகையில் தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு சரியாக உள்ளது” என்றார்.

முன்னதாக விழா மலரை தளவாய்சுந்தரம் வெளியிட்டார். அதை கலெக்டர் பிரசாந்த் வடநேரே பெற்றுக் கொண்டார்.

இந்த விழாவில் முன்னாள் எம்.எல்.ஏ. ராஜன், ஆரல்வாய்மொழி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலைவர் கிருஷ்ணகுமார் உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் பொருளாளர் புவனேஷ்வரி நன்றி கூறினார்.

Next Story