பெங்களூருவில் ‘ஏரோ இந்தியா-2019’ விமான கண்காட்சி நிர்மலா சீதாராமன் தொடங்கி வைத்தார்
பெங்களூருவில் நேற்று 12-வது ஏரோ இந்தியா-2019 சர்வதேச விமான கண்காட்சி நேற்று தொடங்கியது.
பெங்களூரு,
இந்திய ராணுவத்துறை சார்பில் 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை பெங்களூருவில் சர்வதேச விமான கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது.
சர்வதேச விமான கண்காட்சி
கடைசியாக கடந்த 2017-ம் ஆண்டு பெங்களூருவில் இக்கண்காட்சி நடத்தப்பட்டது. இந்த நிலையில் 12-வது பெங்களூரு சர்வதேச விமான கண்காட்சி, பெங்களூரு எலகங்கா விமானப்படை தளத்தில் பிப்ரவரி மாதம் 20-ந் தேதி முதல் 24-ந் தேதி வரை 5 நாட்கள் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
அதேபோல் 12-வது பெங்களூரு சர்வதேச விமான கண்காட்சி தொடக்க விழா நேற்று பெங்களூரு எலகங்கா விமானப்படை தளத்தில் நடந்தது. இதில் ராணுவத்துறை மந்திரி நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டு கண்காட்சியை தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
இந்தியாவில் 600 இந்திய நிறுவனங்கள், 200 வெளிநாட்டு நிறுவனங்கள் ராணுவ தளவாட உற்பத்தியில் ஈடுபட்டுள்ளன. இந்த கண்காட்சியில் போர் விமானங்கள் மட்டுமின்றி ராணுவ தளவாட உற்பத்தி நிறுவனங்கள், பயணிகள் விமான நிறுவனம் ஆகியவையும் கலந்து கொண்டுள்ளன. இதன்மூலம் உலக அளவில் இந்தியா தன்னை நிலை நிறுத்திக் கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.
வேலைவாய்ப்புகளின் ஓடுதளம்
இந்த கண்காட்சி 100 கோடி வேலைவாய்ப்புகளின் ஓடுதளமாக உள்ளது. இந்தியாவில் ராணுவ தளவாடங்களை உற்பத்தி செய்து ஏற்றுமதியை பெருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பிரதமர் நரேந்திர மோடி விழாக்களில் பேசும்போது இந்தியாவில் தயாரிப்போம் என்று அடிக்கடி வலியுறுத்துவார். அதன்படி ‘மேக் இன் இந்தியா’, அதாவது இந்தியாவில் தயாரிப்போம் என்பதுதான் இந்த கண்காட்சியின் நோக்கம்.
உற்பத்தி துறை நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் முக்கிய பங்காற்றுகிறது. அதேபோல் பெங்களூரு மென்பொருள் உற்பத்தி உள்பட சேவைத்துறையும் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் முக்கிய பங்காற்றுகிறது.
இந்தியாவில் தொழில் தொடங்க...
‘மேக் இன் இந்தியா’(இந்தியாவில் தயாரிப்போம்) திட்டத்தில் உற்பத்தி துறையின் மூலம் முதலீட்டாளர்கள் இந்தியாவில் முதலீடு செய்ய முன்வர வேண்டும். விமானத்துறையில் பல புதுமையான விஷயங்களை புகுத்தி வருகிறோம். இதில் ‘ஸ்டார்ட்-அப்’, அதாவது புதிதாக தொழில் தொடங்குதல் முக்கிய பங்காற்றுகிறது. இந்தியாவில் தொழில் தொடங்க உகந்த சூழல் ஏற்பட்டுள்ளது. மாநிலங்களில் தொழில் தொடங்குவதற்கான சூழல் குறித்து தரவரிசை பட்டியலை வெளியிட்டு வருகிறோம்.
இது தொழில் முதலீட்டாளர்களுக்கு நல்ல வாய்ப்பை ஏற்படுத்தி தருகிறது. இந்தியாவில் தயாரிப்போம் திட்டத்தில் புதிய சிந்தனை, புதிய உற்பத்தி முறைகள் புகுத்தப்பட்டு வருகின்றன. கடந்த 2014-ம் ஆண்டு முதல் 2018-ம் ஆண்டு வரை ராணுவத்திற்கென 150 தொழில் ஓப்பந்தங்கள் போடப்பட்டன. இதில் ரூ.1 லட்சத்து 27 ஆயிரத்து 500 கோடி மதிப்பீட்டில் பொருட்களை உற்பத்தி செய்ய ஒப்பந்தம் செய்துள்ளோம். கடந்த 4 ஆண்டுகளில் 126 உள்நாட்டு நிறுவனங்களிடம் இருந்து ரூ.2 லட்சத்து 76 ஆயிரத்து 950 கோடி ராணுவ தளவாடங்களை கொள்முதல் செய்ய ஒப்பந்தம் செய்துள்ளோம்.
100 சதவீத அன்னிய நேரடி முதலீடு
இந்தியாவில் சந்தை வாய்ப்பு நன்றாக உள்ளது. ராணுவத்துறையில் அன்னிய நேரடி முதலீட்டுக்கு விதிகளை தளர்த்தி உள்ளோம். இதன்மூலம் ராணுவ தளவாடங்களை இந்தியாவில் உற்பத்தி செய்ய 100 சதவீத அன்னிய நேரடி முதலீடு அனுமதிக்கப்பட்டுள்ளது. அதனால் வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்ய முன்வர வேண்டும்.
2014-2015-ம் ஆண்டில் ராணுவ தளவாட உற்பத்தி தொழிற்சாலை ரூ.43 ஆயிரத்து 400 கோடி மதிப்பிலான தளவாடங்களை கொள் முதல் செய்தன. கடந்த 2017-2018-ம் ஆண்டில் ரூ.58 ஆயிரத்து 163 கோடி அளவிற்கு தளவாடங்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன. 10 ஆயிரம் சிறு, குறு தொழில் நிறுவனங்களிடம் ராணுவ தளவாட பொருட்களை உற்பத்தி செய்து வழங்கிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
ராணுவ தொழில் வழித்தடம்
பெங்களூரு- ஓசூர் - சென்னை இடையே ராணுவ தொழில் வழித்தடம் அமைக்கப்பட்டு வருகிறது. அதேபோல் உத்தரபிரதேசத்திலும் ஒரு ராணுவ தொழில் வழித்தடம் அமைக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் உள்ள கோவையில் கொடிசியா அமைப்புடன் சேர்ந்து விமான தொழிற்பேட்டை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் பேசினார்.
விழாவில் முதல்-மந்திரி குமாரசாமி, விமானத்துறை மந்திரி சுரேஷ் பிரபு, மத்திய புள்ளியல் மற்றும் திட்ட செயலாக்கத்துறை மந்திரி சதானந்தகவுடா, ராணுவத்துறை இணை மந்திரி சுபாஷ் ராம்ராவ் பாம்ரே, ராணுவ தளபதி பிபின் ராவத், விமானப்படை தளபதி பீரேந்திரசிங் தனோவா, கடற்படை தளபதி சுனில் லன்பா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
விமான சாகசங்கள்...
விழா முடிந்ததும் விமான சாகசங்கள் தொடங்கின. முதலில் தனுஷ், சாரங், சாரஸ் ஹெலிகாப்டர்கள், சுகோய், தேஜஸ் மற்றும் போர் விமானங்கள் அணிவகுப்பு நடத்தின. அதைத்தொடர்ந்து இந்திய ராணுவப்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர்கள் மற்றும் விமானங்கள் வானில் சாகச நிகழ்ச்சிகளை நடத்தின. இதில் குறிப்பாக சாரங் ஹெலிகாப்டர்கள் ஒன்றோடொன்று மோதுவதுபோல் வந்த காட்சிகள் காண்போரை மெய்சிலிர்க்க வைத்தன. அந்த ஹெலிகாப்டர்கள் குறைவான உயரத்தில் பறந்து வந்து, மத்திய மந்திரி நிர்மலா சீதாராமனுக்கு வணக்கம் செலுத்தின.
இதுமட்டுமின்றி அமெரிக்க ராணுவத்துக்கு சொந்தமான எப்-16 என்ற வகையைச் சேர்ந்த போர் விமானமும் சாகசத்தில் ஈடுபட்டது. எல்.யூ.எச்., எல்.சி.எச். ஹெலிகாப்டர்கள் சாகசத்தில் ஈடுபட்டன. இந்த சாகச நிகழ்ச்சியில் முக்கியமாக ரபேல் போர் விமானங்கள் வானத்தில் தாறுமாறாக சுழன்று, மேலிருந்து கீழ் நோக்கி செங்குத்தாக வந்து சாகசம் நிகழ்த்தியது காண்போரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. இந்த கண்காட்சியில் ரஷியா, அமெரிக்கா, இங்கிலாந்து, இத்தாலி, இஸ்ரேல், உக்ரைன் உள்பட 30-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த 400 விமான உற்பத்தி நிறுவனங்கள் பங்கேற்று கண்காட்சி அரங்குகளை அமைத்துள்ளன. விமான சாகச நிகழ்ச்சியில் ஏர்பஸ் ஏ-330 ரக பயணிகள் விமானமும் தாழ்வாக வளைந்தும், சாய்ந்தும் பறந்து பார்வையாளர்களின் கண்களுக்கு விருந்தளித்தது.
சூர்யகிரண் விமானங்கள் பங்கேற்கவில்லை
இந்த கண்காட்சி தொடக்க விழாவையொட்டி துணை ராணுவப்படையினர் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். எலகங்கா விமானப்படை தளத்தை சுற்றிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நேற்று முன்தினம் விபத்து நடந்த காரணத்தால், நேற்றைய சாகச நிகழ்ச்சியில் சூர்யகிரண் விமானங்கள் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கண்காட்சி தொடக்க விழாவுக்கு முன்பு, நேற்று முன்தினம் ‘சூர்யகிரண்’ சாகசத்தில் ஈடுபட்டபோது, ஏற்பட்ட விபத்தில் மரணம் அடைந்த விமானிக்கு மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் உள்பட அனைவரும் எழுந்து நின்று 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர்.
Related Tags :
Next Story