பிளஸ்–2 பொதுத்தேர்வில் புதிய மாதிரி வினாத்தாள் வடிவமைப்பில் தேர்வு நடத்தினால் பாதிப்பு ஏற்படும் பழைய முறையை பின்பற்ற கோரிக்கை
நடைபெற உள்ள பிளஸ்–2 பொதுத்தேர்வில் புதிய மாதிரி வினாத்தாள் வடிவமைப்பில் தேர்வு நடத்தப்பட்டால் மாணவ–மாணவிகளுக்கு பாதிப்பு ஏற்படும் நிலை உள்ளதால் பழைய முறையை பின்பற்ற வேண்டும் என்று தேர்வுத்துறைக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.
விருதுநகர்,
நடப்பு கல்வியாண்டிற்கான பிளஸ்–2 பொதுத்தேர்வு மார்ச் 1–ந்தேதி தொடங்கி 19–ந்தேதி வரை நடைபெற உள்ளது. இந்த பொதுத்தேர்வில் மொத்தம் மதிப்பெண் 600ஆக குறைக்கப்பட்டுள்ளது. செய்முறை தேர்வு இல்லாத பாடத்திற்கு 90 மதிப்பெண்களுக்கும், செய்முறை தேர்வு உள்ள பாடங்களுக்கு 70 மதிப்பெண்களுக்கும் எழுத்துத்தேர்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பொதுத்தேர்வில் புதிய மாதிரி வினாத்தாள் அடிப்படையிலேயே நடத்தப்படும் என்று தேர்வுத்துறை இயக்குனரகம் தெரிவித்துள்ளது.
இதனையொட்டி ஏற்கனவே இந்த மாதிரி வினாத்தாள் அனைத்து முதன்மை கல்வி அலுவலகங்களுக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதுடன், இணையதளத்திலும் வெளியிடப்பட்டுள்ளது. புதிய மாதிரி வினாத்தாள் வடிவமைப்பு, நுழைவுத்தேர்வுக்கான வினாத்தாள் வடிவமைப்பில் அமைக்கப்பட்டுள்ளது.
ஆனால் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் இந்த பொதுத்தேர்வினை புதிய மாதிரி வினாத்தாள் வடிவமைப்பில் நடத்தினால் பாதிப்பு ஏற்படும் என்று தெரிவித்துள்ளனர். ஏற்கனவே இந்த கல்வியாண்டு தொடக்கத்தில் இருந்து பழைய முறைப்படி தான் பாடம் நடத்தப்பட்டுள்ளது. மேலும் காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வுகளும் தற்போது நடைபெறும் திருப்புதல் தேர்வுகளும் பழைய முறைப்படி நடத்தப்பட்டுள்ளது. ஆனால் பொதுத்தேர்வில் மட்டும் புதிய மாதிரி வினாத்தாள் வடிவமைப்பில் நடத்தினால் மாணவர்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும்.
பள்ளிக்கல்வி துறை இந்த கல்வியாண்டு தொடக்கத்திலேயே புதிய மாதிரி வினாத்தாள் வடிவமைப்பை அறிமுகப்படுத்தியிருந்தால் மாணவர்களுக்கு பொதுத்தேர்வில் சிரமம் ஏற்பட்டிருக்காது.
எனவே மாணவர்களின் நலன் கருதி மார்ச் மாதம் நடைபெற உள்ள பொதுத்தேர்வினை ஏற்கனவே பயிற்றுவித்த பழைய வினாத்தாள் வடிவமைப்பிலேயே தேர்வு நடத்துவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும். புதிய வினாத்தாள் வடிவமைப்புபடி அடுத்த கல்வியாண்டு முதல் அமல்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் 91 தேர்வு மையங்களில் 25 ஆயிரத்து 722 மாணவர்கள் பிளஸ்–2 தேர்வு எழுதவுள்ளனர். இதில் மாணவர்கள் 11 ஆயிரத்து 561 பேரும், மாணவிகள் 13 ஆயிரத்து 661 பேரும் தேர்வு எழுதஉள்ளனர். கடந்த ஆண்டும் நடந்த பிளஸ்–2 பொதுத்தேர்வில் இந்த மாவட்டத்தில் தேர்வு எழுதிய 24 ஆயிரத்த 297 பேரில் 23 ஆயிரத்து 580 பேர் தேர்ச்சி பெற்றனர். 97.05 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்று விருதுநகர் மாவட்டம் மாநில அளவில் முதலிடம் பிடித்தது. இந்த ஆண்டும் பிளஸ்–2 பொதுத்தேர்வில் முதலிடத்தை தக்கவைக்க மாவட்ட பள்ளிக்கல்வி துறை அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டுள்ளது.