வத்திராயிருப்பு தாலுகாவில் அடங்கும் கிராமங்கள் கலெக்டர் அறிவிப்பு
வத்திராயிருப்பு புதிய தாலுகாவில் அடங்கும் வருவாய் கிராமங்கள் விவர பட்டியலை கலெக்டர் வெளியிட்டுள்ளார்.
விருதுநகர்,
கலெக்டர் சிவஞானம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்து இருப்பதாவது:–
ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா 6 குறு வட்டங்கள், 49 வருவாய் கிராமங்களை கொண்டுள்ளது. வத்திராயிருப்பு மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம மக்களுக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் தாசில்தார் அலுவலகம் சென்று தங்களது தேவைகளை பூர்த்தி செய்து கொள்வது சிரமமாக இருந்ததை கருத்தில் கொண்டு, ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா பிரிக்கப்பட்டு வத்திராயிருப்பை தலைமையிடமாக கொண்டு வத்திராயிருப்பு என்ற புதிய தாலுகா உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த தாலுகாவில் வத்திராயிருப்பு, நத்தம்பட்டி மற்றும் கோட்டையூர் ஆகிய 3 குறு வட்டங்கள் உள்ளன. வத்திராயிருப்பு குறுவட்டத்தில் வத்திராயிருப்பு, கான்சாபுரம், வ.புதுப்பட்டி மற்றும் எஸ்.கொடிக்குளம் ஆகிய 4 வருவாய் கிராமங்கள் உள்ளன. கோட்டையூர் குறுவட்டத்தில் கோட்டையூர், மகாராஜபுரம், தம்பிபட்டி, மரிக்கலம்காத்தான், இலந்தைக்குளம், ஆயர்தர்மம், கோவிந்தநல்லூர், வெள்ளப்பொட்டல் மற்றும் அயன்கரிசல்குளம் ஆகிய 9 வருவாய் கிராமங்கள் இடம்பெறுகின்றன. நத்தம்பட்டி குறு வட்டத்தில் நத்தம்பட்டி, சுந்தரபாண்டியம், ருத்திரப்பநாயக்கன்பட்டி, வடுகப்பட்டி, களத்தூர், அம்மாபட்டி, மூவரைவென்றான், துலுக்கப்பட்டி, செம்மாண்டிகரிசல்குளம் மற்றும் குன்னூர் ஆகிய 10 கிராமங்களும் உள்ளன.
இந்த கிராமங்கள் மற்றும் அதனை உள்ளடக்கிய குக்கிராமங்களில் வசித்து வரும் பொதுமக்கள் அனைவரும் தங்களது கோரிக்கைகள் தொடர்பாக வத்திராயிருப்பில் உருவாக்கப்பட்டுள்ள புதிய தாசில்தார் அலுவலகத்தை அணுகி பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும் புதிய தாசில்தார் அலுவலகம், வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் செயல்படுகிறது.
இவ்வாறு கூறியுள்ளார்.