விருதுநகர் புதிய பஸ் நிலையத்துக்கு பஸ்கள் வந்து செல்ல நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
விருதுநகர் புதிய பஸ் நிலையத்தை மராமத்து செய்து வெளியூர் பஸ்கள் வந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முன்னாள் நகர்மன்ற காங்கிரஸ் கவுன்சிலர்கள் மனு கொடுத்துள்ளனர்.
விருதுநகர்,
கலெக்டர் சிவஞானத்திடம், விருதுநகர் நகர்மன்ற காங்கிரஸ் முன்னாள் கவுன்சிலர்கள் நாகேந்திரன், வள்ளிக்குட்டி ராஜா, ரமேஷ், பேபி, செல்வரத்தினம், சுந்தர் ஆகியோர் கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:–
விருதுநகரில் பெருந்தலைவர் காமராஜர் பெயரில் உள்ள புதிய பஸ் நிலையம் பல ஆண்டுகளாக செயல்படாமல் உள்ளது. இதனால் பஸ் நிலைய கட்டிடங்கள் மிகவும் சேதமடைந்த நிலையில் உள்ளன. மேலும் இந்த பஸ் நிலையம் நீண்ட நாட்களாக சரிசெய்யப்படாமல் உள்ளது. எனவே பஸ் நிலைய கட்டிடங்களை மராமத்து செய்து, வெளியூர் பஸ்கள் வந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் புதிய பஸ் நிலையத்தில் இருந்து பழைய பஸ் நிலையத்திற்கு பஸ்கள் இயக்க வேண்டும்.
நகரில் சாலை சீரமைப்புக்கு அரசு ஒதுக்கீடு செய்யும் நிதியினை அனைத்து வார்டுகளுக்கும் பாரபட்சம் இன்றி ஒதுக்கீடு செய்ய வேண்டும். நகராட்சியில் பிறப்பு சான்றிதழ் பெற வரும் தாய்மார்களுக்கு வசதியாக அறை கட்ட வேண்டும். விருதுநகர் நகராட்சியில் செயல்பாட்டில் உள்ள பாதாள சாக்கடை திட்டம் முழுமையாக செயல்படாமல் உள்ளது. இந்த திட்ட பணிகளை முழுமையாக முடித்து செயல்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நகரில் பல தெருக்களில் பாதாளச் சாக்கடை குழாய்களில் டம்மி அடைப்புகள் உள்ளதால், வீடுகளுக்குள் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. எனவே கழிவுநீர் தேங்குவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த பிரச்சினைகள் குறித்து நகராட்சி ஆணையாளர் மற்றும் அதிகாரிகளிடம் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க கலெக்டர் முன்வர வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.