ராஜபாளையத்தில் பரிதாபம் பள்ளிக்கு சென்ற பிளஸ்–1 மாணவர் லாரி மோதி சாவு


ராஜபாளையத்தில் பரிதாபம் பள்ளிக்கு சென்ற பிளஸ்–1 மாணவர் லாரி மோதி சாவு
x
தினத்தந்தி 20 Feb 2019 11:00 PM GMT (Updated: 20 Feb 2019 9:47 PM GMT)

ராஜபாளையத்தில் லாரி மோதியதில், பள்ளிக்கு சென்ற பிளஸ்–1 மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

ராஜபாளையம்,

ராஜபாளையம் சின்னசுரைக்காய் பட்டியை சேர்ந்தவர் சுரேஷ். கூலி தொழிலாளியான இவருக்கு 2 மகன்கள். மூத்த மகன் அஜய்குமார்(வயது16) சத்திரப்பட்டி சாலையில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்–1 படித்தார். இரண்டாவது மகன் மாதேஷ் ஜவஹர் மைதானம் அருகே உள்ள தனியார் பள்ளியில் 3– ம் வகுப்பு படித்து வருகிறான்.

அஜய்குமார் தனது வீட்டில் இருந்து நடந்து சென்று, பழைய பஸ் நிலையத்தில் இருந்து பஸ் மூலம் பள்ளிக்கு செல்வது வழக்கம். வழக்கம் போல தனது வீட்டில் இருந்து நேற்று பஸ் நிலையத்திற்கு சென்று கொண்டிருந்த போது, எதிரே கோவையில் இருந்து, நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்திற்கு அட்டை பாரம் ஏற்றி சென்று கொண்டிருந்த லாரி எதிர்பாராத விதமாக மாணவர் மீது மோதியது.

லாரி சக்கரத்தில் சிக்கி அஜய்குமார் உடல் நசுங்கினார். ரத்த வெள்ளத்தில் கிடந்த அவரை ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் மாணவர் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதனை அடுத்து லாரி டிரைவர் அம்பாசமுத்திரத்தை சேர்ந்த சிவா என்பவரை கைது செய்த வடக்கு போலீசார் விபத்து குறித்து விசாரித்து வருகின்றனர்.நடந்து சென்ற மாணவர் லாரி மோதி பலியான சம்பவம், ராஜபாளையம் பகுதி மக்கள் மற்றும் பள்ளி மாணவர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Related Tags :
Next Story