மகளுடன் தேர்வு எழுதும் ஆட்டோ டிரைவர்
மும்பையில் மகளுடன் சேர்ந்து ஆட்டோ டிரைவர் ஒருவர் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதுகிறார்.
மும்பை முல்லுண்டு பகுதியை சேர்ந்தவர் ஆட்டோ டிரைவர் ஷரிப் கான் (வயது43). உத்தரபிரதேசத்தை சேர்ந்த இவர் கடந்த 2017-ம் ஆண்டு தனித்தேர்வராக 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதி 51.20 சதவீதம் மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றார். தற்போது இவர், இன்று தொடங்க உள்ள 12-ம் வகுப்பு தேர்வை எழுத உள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-
நான் சிறிய வயதில் பெரிய படிப்புகளை படிக்க வேண்டும் என்று விரும்பினேன். ஆனால் வறுமை காரணமாக 8-ம் வகுப்பிற்கு பிறகு என்னால் படிப்பை தொடர முடியவில்லை. வீட்டில் நான் தான் மூத்தவன். எனக்கு 6 தம்பிகள். இதனால் குடும்பத்தை காப்பாற்ற படிப்பை விட்டுவிட்டு வேலைக்கு வந்துவிட்டேன்.
இந்தநிலையில் படிப்பில் எனக்கு இருந்த ஆர்வத்தை பார்த்து குடும்பத்தினரும், நண்பர்களும் படிக்க உற்சாகப்படுத்தினார்கள். அதனால் தான் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வை எழுத முடிவு செய்தேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
தனியார் டியூசனுக்கு செல்லும் அளவிற்கு வசதியில்லாததால் கல்லூரியில் படிக்கும் ஷரிப் கானின் மகளே அவருக்கு பாடங்களை கற்று கொடுத்து உள்ளார். ஷரிப் கானின் இளைய மகள் ஆயிஷாவும் தந்தையுடன் சேர்ந்து 12-ம் வகுப்பு பொதுத்தேர்வை எழுத இருப்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story