மதுரை அடகு கடையில் 12 கிலோ தங்க நகைகள், ரூ.9 லட்சம் கொள்ளை வடமாநில கொள்ளையர்களின் கைவரிசையா? 4 தனிப்படை அமைத்து போலீசார் தேடுதல் வேட்டை


மதுரை அடகு கடையில் 12 கிலோ தங்க நகைகள், ரூ.9 லட்சம் கொள்ளை வடமாநில கொள்ளையர்களின் கைவரிசையா? 4 தனிப்படை அமைத்து போலீசார் தேடுதல் வேட்டை
x
தினத்தந்தி 20 Feb 2019 11:15 PM GMT (Updated: 20 Feb 2019 10:19 PM GMT)

மதுரை நகை அடகுக் கடையில் 12 கிலோ தங்க நகைகள், ரூ.9 லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் வடமாநில கொள்ளையர்களின் கைவரிசையா என்று போலீசார் 4 தனிப்படை அமைத்து தீவிர தேடுதல் வேட்டையை தொடங்கி உள்ளனர்.

மதுரை,

மதுரை அழகர்கோவில் ரோட்டைச் சேர்ந்தவர் கோபிநாத் (வயது 61). இவர் நரிமேடு மருதுபாண்டியர் நகரில் உள்ள ஒரு வீட்டில் நகை அடகுக்கடை நடத்தி வருகிறார்.

நேற்று முன் தினம் காலை கோபிநாத் கடையை பூட்டி விட்டு குடும்பத்துடன் கோவிலுக்கு சென்றார். நள்ளிரவில் கொள்ளையர்கள் கியாஸ் வெல்டிங் எந்திரம் மூலம் கடையின் கதவு, லாக்கர்களை உடைத்து அதில் கடையில் இருந்த 1492 பவுன்(சுமார் 12 கிலோ) தங்க நகைகள் மற்றும் 9 லட்சம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டதாக கூறியிருந்தார்.

இது குறித்து தல்லாகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அதில் கடையில் கண்காணிப்பு கேமராக்கள் இருக்கிறதா என்று ஆய்வு செய்த போது, கடையில் கண்காணிப்பு கேமராக்கள் எதுவும் இல்லை. ஆனால் இவர்களது கடைக்கு எதிரே உள்ள கடையில் 2 கண்காணிப்பு மேராக்கள் இருந்தன. அந்த கேமராக்களை கொள்ளையர்கள் வேறு திசையில் திருப்பி வைத்து கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றியதும் தெரிய வந்தது.

மேலும் போலீசார் நடத்திய முதல் கட்ட விசாணையில், மூகமுடி அணிந்தபடி 2 பேர் மினி சரக்கு வேனில் வந்து, இந்த கொள்ளை சம்பவத்தை நிகழ்த்திச்சென்றிருக்கலாம் என சந்தேகிக்கிறார்கள். மேலும் அவர்கள் பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்து கியாஸ் வெல்டிங் எந்திரம் மூலம் கடையில் இருந்த 16 பூட்டுகள் மற்றும் 3 இரும்பு பெட்டிகளை உடைத்து நகை, பணத்தை கொள்ளையடித்து முன்பக்க கதவு வழியாக வெளியே சென்றுள்ளனர். இது குறித்து மாநகர போலீஸ் கமி‌ஷனர் டேவிட்சன் தேவாசீர்வாதம் உத்தரவின் பேரில் துணை போலீஸ் கமி‌ஷனர் செந்தில்குமார் மேற்பார்வையில் உதவி கமி‌ஷனர் ரமேஷ், இன்ஸ்பெக்டர்கள் அருணாசலம், சக்கரவர்த்தி, முருகன் ஆகியோர் அடங்கிய 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.

தனிப்படை போலீசார் அங்கு சென்று கடை உரிமையாளர் மற்றும் அங்கு வேலை பார்ப்பவர்களிடம் விசாரணை நடத்தினர். மேலும் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களையும் ஆய்வு செய்தனர். இது குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும் போது, இந்த மாதிரி கொள்ளையில் வடமாநில கொள்ளையர்கள் தான் ஈடுபடுபவார்கள் என்றும், அவர்கள் வெகுநாட்களாக அந்த பகுதியை நோட்டமிட்டு கொள்ளைக்கான திட்டத்தை தீட்டி உள்ளதும் தெரியவந்துள்ளது.

மேலும் கொள்ளையர்கள் பயன்படுத்திய வெல்டிங் ராடு மதுரை சுற்றியுள்ள பகுதியில் தயாரிக்கப்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதை வைத்து விசாரணையை நகர்த்தி உள்ளோம். மேலும் கடையில் வேலை பார்பவர்கள் மற்றும் அங்கு அடிக்கடி வரும் வாடிக்கையாளர்கள் விவரங்களையும் பெற்று அவர்களிடமும் விசாரிக்க உள்ளோம். கொள்ளை சம்பவத்தில் 2 முதல் 4 முகமுடி அணிந்த நபர்கள் ஈடுபட்டிருக்கலாம். அவர்கள் அனைவரும் அந்த பகுதியை நன்கு அறிந்து இந்த கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றி உள்ளனர் என்றார்.


Next Story