உரிய ஆவணங்கள் இன்றி இந்தியாவுக்குள் நுழைந்த வங்காளதேச பெண்ணுக்கு 4 ஆண்டு சிறை தண்டனை புதுச்சேரி கோர்ட்டு தீர்ப்பு
பாஸ்போர்ட், விசா ஆகிய ஆவணங்கள் இன்றி இந்தியாவுக்குள் நுழைந்த வங்காளதேச பெண்ணுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து புதுச்சேரி கோர்ட்டு தீர்ப்பு கூறியது.
புதுச்சேரி,
புதுச்சேரி மாநிலம் வில்லியனூர் கீழசாத்தமங்கலம் புதுநகரைச் சேர்ந்தவர் அய்யனார் (வயது 43). இவருடைய மனைவி கலைவாணி (37). இவர்களுடைய வீட்டில் கடந்த 2015–ம் ஆண்டு வங்காளதேச நாட்டை சேர்ந்தவர் ஜோதி என்கிற அக்தர் ஜோஸ்னா (வயது 28) என்பவர் தங்கி இருந்தார்.
இவர்கள் 3 பேரும் புதுவை மிஷன் வீதியில் உள்ள ஒரு தனியார் வங்கியில் ரூ.21 ஆயிரம் கள்ளநோட்டை மாற்ற முயன்றதாக கூறப்பட்டது. இது தொடர்பாக பெரியகடை போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்கள் 3 பேரையும் கைது செய்தனர். விசாரணையில், ஜோதி பாஸ்போர்ட், விசா இன்றி இந்தியாவுக்கு நுழைந்து, சட்டவிரோதமாக தங்கியிருந்தது தெரியவந்தது.
இந்த வழக்கு புதுச்சேரி முதன்மை குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கிருஷ்ணசாமி, நேற்று தீர்ப்பு கூறினார். அதில் கள்ளநோட்டு விவகாரத்தில் இருந்து அய்யனார் உள்பட 3 பேரும் விடுவிக்கப்பட்டனர். ஆனால் பாஸ்போர்ட், விசா உள்ளிட்ட உரிய ஆவணங்கள் இன்றி இந்தியாவுக்குள் நுழைந்ததற்காக ஜோதிக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறப்பட்டது.
இந்த வழக்கில் அரசு தரப்பு வக்கீல் முத்துவேல் ஆஜரானார்.