நாசிக்கில் இருந்து மும்பை நோக்கி புறப்பட்ட விவசாயிகள் பேரணிக்கு போலீஸ் கெடுபிடி ஒருநாள் ஒத்திவைப்பதாக திடீர் அறிவிப்பு


நாசிக்கில் இருந்து மும்பை நோக்கி புறப்பட்ட விவசாயிகள் பேரணிக்கு போலீஸ் கெடுபிடி ஒருநாள் ஒத்திவைப்பதாக திடீர் அறிவிப்பு
x
தினத்தந்தி 21 Feb 2019 4:11 AM IST (Updated: 21 Feb 2019 4:11 AM IST)
t-max-icont-min-icon

முழுமையான பயிர்க்கடன் தள்ளுபடி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாசிக்கில் இருந்து மும்பை நோக்கி புறப்பட்ட விவசாயிகள் பேரணி போலீஸ் கெடுபிடி காரணமாக ஒரு நாள் ஒத்திவைக்கப்பட்டது.

புனே, 

மராட்டியத்தில் முழுமையான பயிர்க்கடன் தள்ளுபடி, விவசாய விளைபொருள்களுக்கு தகுந்த விலை, விவசாயிகளுக்கு ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை விவசாயிகள் வலியுறுத்தி வருகிறார்கள்.

உலுக்கிய பேரணி

மேற்கண்ட கோரிக்கைகளை முன்வைத்து விவசாயிகள் நாசிக்கில் இருந்து மும்பைக்கு கடந்த ஆண்டு மார்ச் மாதம் சட்டசபையை நோக்கி பிரமாண்ட பேரணியை நடத்தினார்கள்.

அகில இந்திய கிஷான் சபா ஏற்பாட்டில் நடந்த இந்த பேரணியில் சுமார் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். விவசாயிகளின் இந்த பேரணி மராட்டியத்தை உலுக்கியது மட்டுமின்றி ஒட்டு மொத்த நாட்டு மக்களின் கவனத்தையும் ஈர்த்தது.

அப்போது, விவசாய பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திய மாநில அரசு, விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்றுக் கொள்வதாக அறிவித்தது. இதையடுத்து போராட்டம் வாபஸ் ஆனது.

மீண்டும் போராட்டம்

அரசு உறுதி அளித்து ஒரு வருடம் நெருங்கும் நிலையில் விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற மாநில அரசாங்கம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என அகில இந்திய கிஷான் சபா கூறியது. எனவே மீண்டும் விவசாயிகளை திரட்டி நாசிக்கில் இருந்து மும்பைக்கு பிரமாண்ட பேரணி நடத்தப்படும் என அந்த அமைப்பு அறிவித்து இருந்தது.

இதில் 23 மாவட்டங்களை சேர்ந்த சுமார் 50 ஆயிரம் விவசாயிகள் பங்கேற்பார்கள் என அந்த அமைப்பு கூறியது. அதன்படி நேற்று பேரணி தொடங்கும் என்றும், 27-ந் தேதி மும்பைக்கு பேரணி சென்றடையும் என்றும் அகில இந்திய கிஷான் சபா தெரி வித்தது.

திரண்ட விவசாயிகள்

பேரணிக்காக நேற்று நாசிக்கில் ஏராளமான விவசாயிகள் திரண்டனர். முன்னதாக பேரணியில் கலந்து கொள்ள பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த விவசாயிகளை போலீசார் வரும் வழியில் தடுத்து நிறுத்தி கைது நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

மேலும் விவசாயிகளை ஏற்றிக் கொண்டு நாசிக் நோக்கி வந்த வாகனங்களுக்கு அபராதம் விதித்தனர். ஆனால் இதையெல்லாம் மீறி அதிகளவில் விவசாயிகள் நாசிக்கில் குவிந்த வண்ணம் இருந்தனர்.

அறிவித்தபடி நேற்று மாலை 5 மணியளவில் விவசாயிகளின் பேரணி நாசிக்கில் இருந்து நடைபயணமாக புறப்பட்டது. ஆனால் போலீஸ் கெடுபிடி காரணமாக எதிர்பார்த்த அளவுக்கு விவசாயிகள் பேரணியில் கலந்து கொள்ள முடியவில்லை.

இந்த நிலையில் விவசாயிகள் பேரணியை ஒரு நாள் ஒத்திவைப்பதாக திடீரென அகில இந்திய கிஷான் சபா தலைவர் அசோக் தாவலே நேற்று இரவு அறிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் கூறியதாவது:-

கண்டனம்

போலீஸ் கெடுபிடி காரணமாக பல்வேறு மாவட்டங்களில் இருந்து விவசாயிகள் நாசிக் வந்து சேர முடியவில்லை. இதனால் தான் பேரணியை ஒரு நாள் ஒத்தி வைத்து உள்ளோம். போலீசாரின் நடவடிக்கையை வன்மையாக கண்டிக்கிறோம்.

இதற்கிடையே எங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த மாநில அரசு முன்வந்துள்ளது. இதற்காக மந்திரி கிரிஷ் மகாஜன் எங்களை தொடர்பு கொண்டார். பேச்சுவார்த்தைக்கு தயாராக தான் உள்ளோம். பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாவிட்டால் பேரணியை திட்டமிட்டப்படி நடத்துவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக விவசாயிகளின் பேரணி குறித்து கருத்து தெரிவித்த மந்திரி கிரிஷ் மகாஜன், தேர்தல் நடைபெறும் நேரத்தில் அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தான் இந்த பேரணி நடத்தப்படுகிறது. மாநில அரசு முடிந்த அளவுக்கு விவசாயிகளுக்காக அனைத்தையும் செய்து உள்ளது என்றார்.

Next Story