ஆயுஷ்மான் பாரத் திட்ட பயன் மக்களை சென்றடைய வேண்டும் கவர்னர் கிரண்பெடி அறிவுறுத்தல்
ஆயுஷ்மான் பாரத் திட்ட பயன்கள் அடித்தட்டு மக்களை சென்றடைய வேண்டும் என்று கவர்னர் கிரண்பெடி அறிவுறுத்தி உள்ளார்.
புதுச்சேரி,
மத்திய அரசு ஏழை மக்களின் மருத்துவ வசதிக்காக ஆயுஷ்மான் பாரத் என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த திட்டம் புதுவையில் பெயரளவில் தொடங்கப்பட்டுள்ளதே தவிர நடைமுறையில் இல்லை.
இதற்கு தேவையான நிதி இல்லாததால் திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளதாக தெரிகிறது. இந்தநிலையில் தேசிய கிராமப்புற சுகாதார திட்ட இயக்குனரும், ஆயுஷ்மான் பாரத் திட்ட அதிகாரியுமான மோகன்குமார் கவர்னர் கிரண்பெடியை சந்தித்து பேசினார். அப்போது அவரிடம் ஆயுஷ்மான் பாரத் திட்டம் மற்றும் கிராமப்புற சுகாதார திட்டத்தை செயல்படுத்தவே பிரத்தியேகமாக நியமிக்கப்பட்டுள்ளதாக கவர்னர் கிரண்பெடி தெரிவித்தார்.
மேலும் அடித்தட்டு மக்களுக்கு ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் பயன்கள் விரைவாக சென்றடைய உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறும் கேட்டுக்கொண்டார். இந்த சந்திப்பின்போது கவர்னரின் சிறப்பு பணி அதிகாரி தேவநீதிதாஸ் உடனிருந்தார்.