கனடா வர்த்தக சபையினர் நாராயணசாமியுடன் சந்திப்பு தொழில் தொடங்குவது குறித்து ஆலோசனை நடத்தினர்
கனடா நாட்டின் தொழில் வர்த்தக சபையினர் முதல்–அமைச்சர் நாராயணசாமியை சந்தித்து புதுவையில் தொழில் தொடங்குவது தொடர்பாக ஆலோசனை நடத்தினர்.
புதுச்சேரி,
புதுவையில் புதிய வேலைவாய்ப்பினை உருவாக்கும் வகையில் மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஏற்கனவே பசுமை தொழிற்சாலைகளை தொடங்குவது தொடர்பாக உள்நாடு மற்றும் வெளிநாட்டு தொழில் முதலீட்டாளர்களுடன் கடந்த மாதம் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது.
இதன் மூலம் ஏராளமான தொழில் முனைவோர் புதுச்சேரியில் புதிய தொழிற்சாலைகளை தொடங்க முன்வந்துள்ளனர். இந்தநிலையில் கனடா நாட்டை சேர்ந்த தொழில் முதலீட்டாளர்கள் இங்கு புதிய தொழிற்சாலை தொடங்குவது தொடர்பாக கேபினட் அறையில் முதல்–அமைச்சர் நாராயணசாமியுடன் ஆலோசனை நடத்தினார்கள்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் கனடா நாட்டின் தூதரக அதிகாரிகள், இந்தோ–கனடா தொழில் வர்த்தக சபையினர் கலந்துகொண்டனர். அப்போது, ஏற்கனவே வகுக்கப்பட்டுள்ள புதிய தொழில் கொள்கையின்படி தொழில் தொடங்குவதற்கான அனைத்து வசதிகளையும் மாநில அரசு துரிதமாக செய்துகொடுக்கும் என நாராயணசாமி உறுதி அளித்தார்.
சந்திப்பின்போது தொழில்துறை அமைச்சர் ஷாஜகான், முதல்–அமைச்சரின் செயலாளர் பார்த்திபன் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.